சென்னை: தமிழகம் முழுவதும் இன்று காலையில் குரூப் 4 தேர்வு நடந்தது. 3935 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வை 13.89 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் 3 மாதத்தில் வெளியிடப்படும். குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு அடுத்தவாரம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) 1,621, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, தட்டச்சர் 1,099, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 உள்ளிட்ட 25 வகையான பணிகளில் 3935 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன.
இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்று முதல் (ஏப்ரல் 25ம் தேதி) மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இத்தேர்வுக்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 743 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆண்கள் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 பேரும், பெண்கள் 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பேர், மூன்றாம் பாலினத்தவர் 117 பேர் அடங்குவர். இந்த நிலையில் குரூப் 4 தேர்வு இன்று காலை நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 314 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 4922 தேர்வு கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள்(20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேர்வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், ராயப்பேட்டை, அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி, பெரம்பூர், வடபழனி, திருவொற்றியூர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் 311 இடங்களில் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் குரூப் 4 தேர்வை 94 ஆயிரத்து 848 பேர் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது. இத்தேர்வு 10ம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. பகுதி “அ”வில் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 வினாக்களும், பகுதி “ஆ’’ வில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவு மனக்கணக்கில் 25 வினாக்கள் என 100 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் அனைத்தும் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு தான் தேர்வு என்றாலும் காலை 7 மணி முதலே தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு வந்திருந்தனர்.
தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குரூப் 4 தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:
குரூப் 4 தேர்வை 13.89 லட்சம் பேர் எழுதுகின்றனர். வெற்றி பெறுவோர் தரவரிசை அடிப்படையில் அழைத்து அவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்படும். இந்த குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் என்பது 3 மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு 4 மாதங்களுக்கு பின்பு தான் தேர்வின் முடிவை வெளியிட்டிருந்தோம். இந்த முறை பல்வேறு நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளதால் மூன்று மாதத்திற்குள் முடிவுகளை வெளியிட உள்ளோம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பொறுத்தவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கடந்தாண்டு 10,701 பேர் பணியமர்த்தப்பட்டனர். இந்தாண்டு ஜூன் மாதம் வரை 11,027 பணியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு 4,300 பேர் அடுத்த இரண்டு மாதங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறைப்படி தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் வரக்கூடிய அறிவிப்பின் படி இன்னும் 10 ஆயிரம் பேரை ஒட்டுமொத்தமாக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் என்பது உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஆண்டு அட்டவணை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக எந்த தேர்வு எப்போது நடக்கிறது உள்ளிட்ட தகவல்களை தேர்வாளர்களுக்கு தெரிவித்துவிட்டோம். ஏனெனில், யுபிஎஸ்சி போன்ற பல்வேறு அரசு துறை சார்ந்த தேர்வுகளை எழுதுவோர்களுக்கு வழிவகை செய்யும் வகையில் இந்த அட்டவணைகளை தேர்வர்களுக்கு கொடுத்துவிட்டோம். இதன் மூலம் அவர்கள் தங்களை தயார் செய்து கொள்வார்கள். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட்டியலின்படி, 7 தேர்வுகள் அறிவிக்கப்பட்டு அதில் 5 தேர்வுகள் நடந்துள்ளன.
குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பை அடுத்தவாரம் வெளியிடுகிறோம். இந்தாண்டு கால அட்டவணை படி உரிய முறையில் தேர்வுகளை நடத்திவிட்டோம். குரூப்-4 தேர்வு தாளை திருத்துவதற்கான கணினி மையம் உள்ளது. ஏற்கனவே, 3 மையம் இருந்த நிலையில், அதனை 6 மையமாக அதிகரித்துள்ளோம். இதனால் 1 லட்சம் தேர்வு தாளை திருத்தலாம். பலவிதமான இடஒதுக்கீடு உள்ளதால் அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்வோம். தேர்வு தாளை திருத்துவது என்பது ஒரு மாதத்தில் திருத்திவிடலாம் ஆனால், இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு என்பது இரண்டு மூன்று மாதங்களாகிவிடும். தேர்வுக்கான கேள்விகள் ரகசியமாக தேர்வு செய்யப்படுகிறது. யாராலும் பார்க்க முடியாது. சர்ச்சைக்குரிய மற்றும் அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என தேர்வு வினாக்கள் தயாரிக்கும் குழுவுக்கு கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய மற்றும் அரசியல் கேள்விகளை கேட்பவர்கள் கேள்வி உருவாக்கும் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்.
அதிக அளவில் தேர்வர்கள் இருப்பதால் வட்டார அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. காவல்துறையின் பாதுகாப்பு, கேமரா கண்காணிப்புடன் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கொண்டு சென்று சேர்க்கப்படுகிறது. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கொண்டு செல்லும் போது அதிகாரிகள் முழு கண்காணிப்பில் இருப்பார்கள். குறிப்பாக மாநில தேர்வாணையம் பொறுத்தவரையில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவை மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் போது வருவாய் துறை அதிகாரி, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், காவல்துறையினர் என அனைவரும் சீல் வைக்கப்பட்ட வினா, விடைத்தாள்களை கொண்டு செல்கிறார்கள். அந்த வகையில் இது மிகவும் பாதுகாப்பான முறையில் தான் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் வினாத்தாள் வெளியாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு; 3935 பதவிகளுக்கு 13.89 லட்சம் பேர் பங்கேற்பு: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அறிவிப்பு appeared first on Dinakaran.