மதுரை: தமிழகம் முழுவதும் ஏப்.28-க்குள் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும். இதை தலைமை செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை விளாங்குடி, மாடக்குளம் பகுதியில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி அதிமுக நிர்வாகிகள் சித்தன், கதிரவன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன் மனுக்களை தள்ளுபடி செய்து, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகள், சமுதாய அமைப்புகளின் நிரந்தர கொடிக் கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற வேண்டும். தனியார் நிலங்களில் கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டார்.