கடலூர்: ஒன்றிய அரசு நிதி தராததால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சியாக கல்வி வளர்ச்சிக்கு தங்களது சேமிப்பு பணத்தை முதல்வருக்கு அளித்து ஆதரவை தெரிவித்து உள்ளனர்.மும்மொழிக் கொள்கை ஏற்றால்தான் தமிழக கல்வித்துறை அளிக்க வேண்டிய ₹2,152 கோடியை விடுவிப்போம் என்று ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த வாரம் கடலூர் மாவட்டத்துக்கு கள ஆய்வுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு உள்ளிட்ட மாணவர்களுக்கு பல்வேறு பிரச்னைகளை உருவாக்குவது தேசிய கல்வி கொள்கை.
மும்மொழிக் கொள்கையால் இந்தி திணிப்பை ஆதரிக்க மாட்டோம் மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல, ஆனால் அதே சமயத்தில் திணிப்பு என்பதை ஏற்க முடியாது. ₹10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் இதுபோன்ற செயலுக்கு தமிழகம் ஆதரவளிக்காது. ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும், திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.
முதல்வரின் இந்த பேச்சை தொடர்ந்து, ஒன்றிய அரசு ₹2000 கோடி கொடுக்கவில்லை என்றால் என்ன, நான் என்னுடைய சேமிப்பில் இருந்து தருகிறேன் என கடலூரில் எல்கேஜி மாணவி நன்முகை தான் சேமித்த பணத்தில் இருந்து ₹10,000 தமிழக முதல்வரின் நிதிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் மாணவர்களின் எழுச்சியால் முதல்வர் நிவாரண நிதிக்கு தினமும் தனது சேமிப்பில் வைத்திருந்த பணத்தை தந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதன் வரிசையில் நேற்று கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் முதல்வர் கல்வி வளர்ச்சி நிதிக்கு பணம் அனுப்பி வைத்தனர்.
The post தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சி; ஒன்றிய அரசு நிதி தராததால் கல்வி வளர்ச்சிக்கு பெருகும் நிதி: சேமிப்பு பணத்தை அரசுக்கு அளித்து ஆதரவு appeared first on Dinakaran.