மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு பாதுகாப்பு வேலி அமைத்து பராமரிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டியிலிருந்து, நகராட்சிக்கு உட்பட்ட 11 வார்டுகளில் உள்ள வீடுகள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, பள்ளிகள், விடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இத்தொட்டியில் கடந்த 9.1.2019ல் துர்நாற்றம் வீசியது. அதனை ஆய்வு செய்தபோது தொட்டிக்குள் ஆண் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சடலம் 5 நாட்களாக தொட்டிக்குள் கிடந்துள்ளது. சடலத்துடன் கலந்த தண்ணீர் 5 நாட்களாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அச்சமடைந்தனர். குடிநீர் தொட்டிகளை தினமும் ஆய்வு செய்வது, உள்ளாட்சி அமைப்புகளின் பணியாகும். ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் பணிகளை செய்யாததால், 5 நாட்களாக சடலம் கிடந்த தண்ணீரை மக்கள் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் பொது குடிநீர் விநியோகம் செய்யும் தொட்டிகளை தினமும் ஆய்வு செய்யவும், இதில் தவறும்பட்சத்தில் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீதர், நீதிபதி எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றிலும் வேலி அமைத்து, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்’’ என, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.
The post தமிழகம் முழுவதும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.