நெல்லை: தமிழ்நாடு முழுவதும் 2 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன் நேரு கூறினார். நெல்லை பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் ரூ.7 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது: இன்றைய விழாவில் 216 பேருக்கு நகர்ப்புறத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள சட்டத்தின் அடிப்படையில் நகர்ப்புற பகுதிகளுக்கு பட்டா வழங்குவது கிடையாது. 20 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் முதல்வராக இருந்த போது 1500 பேருக்கு நகர்ப்புறத்தில் திருச்சியில் பட்டா வழங்கப்பட்டது. தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் நகர்ப்புறத்தில் பட்டா வழங்குவதற்காக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி தனித் தீர்மானம் போட்டு நிறைவேற்றியுள்ளார். அப்படி பட்டா வழங்கும் போது 3 சென்ட் வழங்கினால் மதிப்பு அதிகமாகி விடுகிறது. அதனால் 2 சென்ட் வழங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தின் அடிப்படையில் எல்லா நகர்ப்புறங்களிலும் அந்த நிலத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், மாவட்ட கலெக்டர்களே அந்தப் பட்டாவை வழங்கலாம். ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் மாநில குழுவிற்கு அனுப்பி வருவாய்த்துறை செயலாளரின் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என அனைவருக்கும் பட்டா வழங்கப்படும். வருவாய்த்துறை அமைச்சரிடம் 2 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு பேசினார்.
The post தமிழகம் முழுவதும் 2 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும்: அமைச்சர் கே.என். நேரு தகவல் appeared first on Dinakaran.