சென்னை: தமிழக அமைச்சரவையில் 2 அமைச்சர்களின் துறைகள் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளன. துரைமுருகன் வசம் இருந்த கனிமவளத் துறை, ரகுபதிக்கும், அவரிடம் இருந்த சட்டத் துறை, துரைமுருகனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி 6-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்களாக இருந்த பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறை, அமைச்சர் சிவசங்கரிடமும், மதுவிலக்குத் துறை, முத்துசாமியிடமும் ஒப்படைக்கப்பட்டன. பொன்முடி கவனித்து வந்த வனத் துறை, ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டது. அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டது.