சென்னை:தமிழக அமைச்சரவையில் மேலும் இரண்டு அமைச்சர்களை மாற்ற முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சட்டசபை கூட்டம் முடிந்ததும் இந்த மாற்றத்தை செய்வதற்கான பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. முதல்வரின் மகன் உதயநிதிக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு பொறுப்பேற்று, வரும் மே 7ல் ஓராண்டு முடிகிறது. இதைக் கொண்டாடும் வகையில், சட்டசபையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை என, அ.தி.மு.க.,- பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர். எனவே, அரசின் சாதனைகள் குறித்து, கூட்டணி கட்சிகளின் சட்டசபை தலைவர்களை பேச வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, அரசின் ஓராண்டு நிறைவு பொதுக் கூட்டங்கள் மாநிலம் முழுதும் நடத்தப்பட உள்ளன.ஓராண்டாக சில அமைச்சர்களின் செயல்பாடுகள், முதல்வரை கவரும் வகையில் உள்ளன. குறிப்பாக, நிதி அமைச்சர் தியாகராஜன், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் செயல்பாடுகளை சட்டசபையிலேயே முதல்வர் பாராட்டி உள்ளார்.
அதேநேரம், சில அமைச்சர்களின் செயல்பாட்டில் முதல்வர் அதிருப்தி அடைந்துள்ளார். இதன் வெளிப்பாடாகவே, போக்குவரத்து அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், சமீபத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கரன், போக்குவரத்துத்துறை அமைச்சரானார். அமைச்சர் பதவியில் இருந்து ராஜகண்ணப்பன் துாக்கப்படலாம் என பலரும் எதிர்பார்த்த நிலையில், சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, உள்ளாட்சி தேர்தலிலும் அவர் பங்களிப்பு, கட்சிக்காக கணக்கின்றி செலவு செய்ததை கருத்தில் வைத்து, துறை மட்டும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல, சில அமைச்சர்கள் தங்களுக்கு வேறு துறையை ஒதுக்கி தர வேண்டும் என கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, முதல்வரின் மகனும், சேப்பாக்கம் – -திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை அமைச்சர் ஆக்க வேண்டும் என கோஷமும் அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுதும் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில், அவர் எம்.எல்.ஏ.,வாக பங்கேற்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதைக் காரணம் காட்டி, அரசின் ஓராண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, உதயநிதிக்கு அமைச்சராக பட்டாபிஷேகம் சூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருணாநிதி ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்தார். அவரிடம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளாட்சி துறை ஒப்படைக்கப் பட்டது. மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதியை வழங்கி, பெரிய அளவில் ஸ்டாலின் பிரபலமானார்.
அவ்வாறு பிரபலம் அடைந்தததால் தான், கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்கு பின் நடந்த சட்டசபை தேர்தலில், அவரால் அ.தி.மு.க.,வை வீழ்த்தி எளிதாக முதல்வராக முடிந்தது. அதே பாணியில் உதயநிதியை உள்ளாட்சி துறை அமைச்சராக்க, அதிகார மட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, நேருவிடம் இருந்து நகர்ப்புற நிர்வாகத்துறையும், பெரிய கருப்பனிடம் இருந்து ஊரக வளர்ச்சி துறையும் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு வேறு துறைகள் ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகவே, ஊரக வளர்ச்சி துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பின், 25 ஆயிரம் புதிய சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டு, அவர்களுக்கு சுழல் நிதியாக 30 கோடி ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ’15 ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக 225 கோடி ரூபாய் வழங்கப்படும். வங்கி இணைப்பு திட்டத்தின் கீழ் சுய உதவி குழுக்களுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்’ என்றெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி அமைச்சரானதும், அவரை மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் அனுப்பி வைத்து, மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கி, லோக்சபா தேர்தல் பணிகளை தி.மு.க., தலைமை துவக்க திட்டமிட்டுள்ளது.
அடுத்த மாதம் நடக்க உள்ள அமைச்சரவை மாற்றத்தில், இரண்டு மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி, மேலும் ஓரிரு அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்படலாம் என, ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.