சென்னை: சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்து தமிழக அரசின் விருது பெறுபவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மை வரலாற்றை கொண்டியிங்கும் தமிழ் சமூகத்தின் மொழியின் சீரிளமையின் திறனை, மொழி ஆராய்ச்சி உலகம் வியந்து பார்த்து வருகிறது. ''யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் யெங்கும் காணோம்'' என்றார் மகாகவி. உயர்தனி செம்மொழியாம் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், வளமைக்கும், செழுமைக்கும் வழிவழியாக பலர் பங்களிப்பு செய்து வருகின்றனர். இதில் பெருமைமிகு பங்களிப்பு செய்து வரும் அனைவரையும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பாராட்டி விருது வழங்கி கவுரவித்து வருகிறது.