*வனத்துறையினர் அதிரடி
செங்கோட்டை : ஆரியங்காவு கடமான் பாறை வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை கேரள வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழக – கேரள எல்லையான ஆரியங்காவு கடமான் பாறையில் 127 ஹெக்டேர், சேனகிரியில் 30 ஹெக்டேர், கோட்டை வாசலில் 30 ஹெக்டேர் என கேரள அரசு மொத்தம் 187 ஹெக்டேரில் சந்தன மரக்கன்றுகளை நட்டு சந்தன காடுகளை உருவாக்கி வளர்த்து வருகிறது.
இதில் ஆரியங்காவு கடமன்பாறை அடர்ந்த வன பகுதியில் உள்ள சந்தனக் காட்டுக்குள் சந்தன மரம் ஒன்று வெட்டப்பட்டு இருந்தது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில், மூன்று பேர் ஆரியங்காவு கோட்டை வாசல் வழியாக சந்தனக்காட்டுக்கு வந்து மரத்தை வெட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து ஆரியங்காவு வனச்சரக அலுவலர் சனோஜ் தலைமையில் துணை வன அலுவலர் விஜு, பிரிவு வன அலுவலர் ஜிஜிமோன், பீட் வன அலுவலர்கள் ஹரிகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், காலேஷ் அம்பாடி, காப்புக்காடு காவலர் ஜோமோன் ஆகியோர் கொண்ட குழுவினர் சந்தன மரத்தை வெட்டிய 3 பேரை தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 1 வாரமாக கேரளா வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அதன்பேரில் செங்கோட்டை அடுத்த புளியரை கற்குடி அண்ணா தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (27), அஜித்குமார் (22), கற்குடி இந்திரா காலனியைச் சேர்ந்த குமார் (35) ஆகிய 3 பேரை வெவ்வேறு இடங்களில் கேரள வனத்துறையினர் கைது செய்தனர். கைதான 3 பேரும் இன்று கேரள மாநில வன நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post தமிழக – கேரள எல்லை வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.