சென்னை: தமிழக அரசின் 2025-26ம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் வருகிற மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் மீது மக்கள் தரப்பில் இருந்தும், அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்தும், தொழில் நிறுவனங்கள் தரப்பில் இருந்தும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.இதன்படி 2025-2026ம் நிதியாண்டுக்கான தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட் என்பதால் இதை அரசு மிக முக்கிய பட்ஜெட்டாக கருதுகிறது.
எனவே மக்கள் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள், மக்கள் ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் விரிவாக்கம் போன்ற அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும். பேரவை கூடிய முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். இந்த சூழலில் பட்ஜெட்டில் மக்களின் விருப்பங்களை இடம் பெறச் செய்யும் வகையில் பட்ஜெட்டை இறுதி செய்வதற்கு முன்பதாக அரசு துறைகள் மற்றும் அது சார்ந்த அமைப்புகள், சங்கங்களுடன் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் பட்ஜெட்டுக்கான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று (18ம் தேதி) தலைமை செயலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து இன்றும், நாளையும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. நேற்று நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்தவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இன்று (19ம் தேதி) வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகளுடனும், 20ம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள், தொழில் நிறுவனங்களுடன் நடத்தும் ஆலோசனையின் அடிப்படையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், சலுகைகள் இணைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழக பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு பொதுமக்கள், தொழில் நிறுவனங்களுடன் அமைச்சர்கள் கருத்துகேட்பு கூட்டம் appeared first on Dinakaran.