ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடிப்பதை நிறுத்தினால், இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறினார்.
இந்திய – இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடிய கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:
கச்சத்தீவு திருவிழா இரு நாடுகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழக மீனவர்களின் இழுவை படகுகளால் இலங்கை மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தமிழக மீனவர்கள் இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை நிறுத்தினால், நீண்ட காலமாக தொடரும் இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணவும், இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு இருநாட்டு அரசுகளும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை அமைச்சரிடம் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி ஜேசுராஜ், `இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் நல்ல நிலையில் உள்ள படகுகளையும் விடுவிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.
The post தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை நிறுத்த வேண்டும்: இலங்கை அமைச்சர் சர்ச்சை பேட்டி appeared first on Dinakaran.