சென்னை: கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம், தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.