பிரபல கன்னட இயக்குநர் சந்தோஷ் குமார், ‘யுவன் ராபின் ஹூட்’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில், ‘கேம்பஸ் கிரான்டி’, ‘ஸ்டூடன்ட்ஸ்’, ‘பிருந்தாஸ் கூக்லி’ ஆகிய படங்களை இயக்கியவர். ‘யுவன் ராபின் ஹூட்’ படம் மூலம் கன்னட நடிகர் வீரன் கேஷவ், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். நாயகியாக பாலிவுட் நடிகை அல்பிஃயா ஷேக் நடிக்கிறார். இவர்களுடன் ரித்விகா, பொன்வண்ணன், ஸ்ருதி சுதிர், தேஷ்பாண்டே, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பேஷன் மூவி மேக்கர்ஸ் சார்பில் படத்தைத் தயாரித்து இயக்கும் சந்தோஷ் குமார் கூறும்போது, “தமிழில் இது எனக்கு முதல் படம். காந்தி போல இருக்கும் ஹீரோ, ராபின் ஹூட்டாக உருவெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதுதான் கதை. மார்டின் கிளமன்ட் இசையமைக்கும் இப்படத்துக்கு மேத்தீவ் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை, மும்பை, பெங்களூரு பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.