திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கல்வி சுற்றுலாவாக கொடைக்கானல் அழைத்து செல்லப்பட்டனர். இந்த சுற்றுலா அவர்களின் மனஇறுக்கத்தை போக்கும் வகையிலும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்ததாக பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் இதற்கு ஏற்பாடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் அவர்களது நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு அவர்கள் முன்னேற்றத்திற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது மேற்பார்வையின் கீழ் கொண்டு வந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, தொழில் கடனுதவி, உதவி உபகரணங்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும் தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை உயர்த்தப்பட்டு மாதம் ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.முனைப்புடன் செயல்படும் மாவட்ட நிர்வாகம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் விடுபடாமல் பராமரிப்பு உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை ஒன்றிணைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 0- 6 வயதிற்குட்பட்ட 32 மாற்றுத்திறனாளி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஒரு நாள் கல்வி சுற்றுலாவாக நேற்று கொடைக்கானலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
திண்டுக்கல் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கலெக்டர் சரவணன் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி சுற்றுலா பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். கொடைக்கானலில் நட்சத்திர ஏரி, பில்லர் ராக், வட்டக்கானல், கோக்கர்ஸ் வால்க், பிரையண்ட் பூங்கா, பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள இயற்கை எழில் சூழ்ந்த காட்சிகள், பூங்காவில் பூத்திருந்த வண்ண பூக்கள் மற்றும் பறவைகள், விலங்குகளை குழந்தைகள் கண்டு ரசித்தனர்.
* இயற்கை அழகை பார்த்ததில் மகிழ்ச்சி
இதுகுறித்து சுற்றுலாவில் பங்கேற்ற குழந்தையின் தாய் ராஜேஸ்வரி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்களை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் இந்த கல்வி சுற்றுலாவை ஏற்பாடு செய்து மாற்றுத்திறனாளி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கொடைக்கானலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கொடைக்கானலின் இயற்கை அழகை பார்த்ததில் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மாற்றுத்திறனாளி, மனநலம் குன்றிய குழந்தைகளின் மனஇறுக்கத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் இந்த கல்வி சுற்றுலா இருந்தது. இதுபோன்ற சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
* பெற்றோர்களுக்கும் புத்துணர்வு தந்தது
இதுகுறித்து சுற்றுலாவில் பங்கேற்ற குழந்தையின் தாய் கனிமொழி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் வெளியூர் செல்வது என்றால் மிகவும் சிரமம். அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் அவர்கள் வெளியே செல்வது இல்லை. மாற்றுத்திறனாளி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை இதுபோன்ற சுற்றுலாவிற்கு அழைத்து செல்வது அவர்களுக்கும், அவர்களை பராமரித்து வரும் பெற்றோர்களுக்கும் மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வீட்டுக்குள் முடங்கி இருந்த குழந்தைகள் இயற்கை காட்சிகள், பறவைகள், விலங்குகள், சின்ன சின்ன பூச்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
குழந்தைகளின் மகிழ்ச்சியை கண்டு பெற்றோர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர். இறுக்கமான சூழ்நிலையில் மனஅழுத்தத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கும் இந்த சுற்றுலா மூலம் புத்துணர்வும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் சாப்பாடு நல்ல முறையில் செய்திருந்தனர். மாற்றுத்திறனாளி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த கல்வி சுற்றுலா மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மனஇறுக்கத்தை போக்கியது: பெற்றோர்கள் நெகிழ்ச்சி: முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.