புதுடெல்லி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30க்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து அனைத்து விவகாரத்திலும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருகிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளது. மேலும் துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்திலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணை வருவதற்குள் 24 மணி நேரத்தில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஆளுநர் தரப்பில் இருந்து, தமிழ்நாடு முதல்வரிடம் பேசி ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 4ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்கும் விவகாரத்தில் எட்டு முக்கிய கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அதுகுறித்து உதவிட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினர். அதில், “ குறிப்பாக ஒரு மசோதாவை ஆளுநர் சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பி வைக்கிறார்.
அதை ஏன் அனுப்பி வைக்கிறேன் என்பதை ஆளுநர் குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமா? என்ற கேள்வி உள்ளது. ஏனெனில் அப்படி குறிப்பிடவில்லை என்றால் மாநில அரசால் எப்படி அதை சரி செய்ய முடியும் என்று கேள்வியெழுப்பினர். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், “பெரும்பாலான நேரங்களில் ஆளுநர் அப்படி சொல்வதில்லை. வெறுமனே அதை நிலுவையில் போட்டு வைப்பார் அல்லது காரணம் எதையும் குறிப்பிடாமலேயே நிராகரித்து விடுவார். ஆளுநர் தன்னிச்சையாக சூப்பர் சட்டப்பேரவை போன்று செயல்பட முடியாது” என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில் மீண்டும் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோத்தகி ஆகியோர் வாதத்தில்,‘‘அரசியல் சாசனத்தின்படி ஆளுநருக்கு அதிகாரம் மிக குறைவாகவே உள்ளது. அதேபோன்று குடியரசுத் தலைவருக்கு ஒரு மசோதா அனுப்பபட்டால், அவர் அதன் மீது தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாறாக, குடியரசுத் தலைவர் ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனையை பெற்றுதான் முடிவெடுக்க முடியும்.
மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது என்பது சட்ட விரோதம் மற்றும் விதிமுறைகளுக்கு எதிரானது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க தாமதம் செய்வது என்பது ஜனநாயக விரோத செயல் ஆகும் எனக்கூறி வாதங்களை நிறைவு செய்தனர். தொடர்ந்து ஆளுநர் தரப்பில் ஒன்றிய அரசின் ஆஜரான அட்டர்னி ஜெனரல், ‘‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வாதங்களை ஒப்பிட்டு பார்த்தால் ஆளுநர் என்பவர் மிகச்சிறிய பதவியை கொண்டவர், அவருக்கு என எந்தவித அதிகாரமும் இல்லை என்ற நோக்கத்தில் வாதங்களை முன்வைத்துள்ளனர் ” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஆளுநரின் பதவியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளை மட்டும் தான் நாங்கள் கேள்வியாக கேட்க விரும்புகிறோம். குறிப்பாக மொத்தம் 12 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் இரண்டு மசோதாக்களை முதலிலேயே அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டார். மீதமுள்ள பத்து மசோதாக்களை அரசுக்கு மீண்டும் அனுப்பி விட்டு அவர்கள் அதை ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பித்த போது, அதை திரும்பவும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இவையெல்லாம் ஏன் என்ற கேள்விதான் எங்களுக்கு எழுகிறது.
பல மசோதாக்கள் மீது மூன்று ஆண்டுகளுக்கு மேல் எந்த முடிவையும் எடுக்காத ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை தான் நாங்கள் கேள்வியாக எழுப்புகிறோம் என்று கூறினர். அதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், ‘‘சட்டப்பேரவையில் இருந்து அனுப்பப்படும் ஒரு மசோதா நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கும் என்று ஆளுநர் நினைத்தால் அவர் தனது சொந்த அறிவை பயன்படுத்தி ஒரு மசோதாவின் மீது முடிவெடுக்கிறார். அதன் அடிப்படையில்தான் அவர் மசோதாவை நிறுத்தி வைக்கிறார் அல்லது அரசுக்கு திருப்பி அனுப்புகிறார் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார்.
ஆளுநர் திரும்ப அனுப்பும் மசோதாவை சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றினால், அது சட்டமாகிவிடும். பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி ஒரு மிக முக்கியமான பதவி. அதனை அரசு மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது எப்படி முடியும். இந்த விவகாரத்தில தமிழ்நாடு அரசு மறைமுகமாக நீதிமன்றத்தின் மூலம் அவர்களது மசோதாக்களை சட்டப்பூர்வமாக ஆக்குவதற்கு கோரிக்கை வைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் எங்களது கேள்வி அனைத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் வாய்ப்பு இருந்தபோது ஏன் இரண்டை மட்டும் முதலில் ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார் என்பதை தெரிவியுங்கள். மேலும் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார் என்றால், எந்த பிரிவின் அடிப்படையில் அதனை செய்தார்? அரசியல் சாசனம் 200 இல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா? ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவு எடுத்துள்ளார்.
எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக ஆளுநர் தரப்பு வாதங்களை ஏற்க முடியாது .மேலும் மசோதா தொடர்பாக ஆளுநர் யார் யாருடன் விவாதம் நடத்தினார்? எந்த அறிவுரையின் அடிப்படையில் அவர் நடந்து கொண்டார்?. அதுசார்ந்த அனைத்து விவரங்களும் எங்களுக்கு விரிவாக வேண்டும். மேலும் பத்து மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல், மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு என்ன காரணம்? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை இன்று காலை 10.30மணிக்கு ஒத்தி வைத்தனர்.
* உச்ச நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்விகள்
1. சட்டப்பேரவை ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் ஆளுநர் அதை நிறுத்தி வைத்தால் அதே மசோதாவை மீண்டும் சட்டப்பேரவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பிக்கும் போது ஆளுநர் அந்த மசோதாவை என்ன செய்ய முடியும்.
2. குறிப்பிட்ட அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பதற்கு ஆளுநருக்கு என்று எத்தகைய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
3. எந்த அதிகாரத்தின் படி நடைமுறையின் படி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஒரு மசோதாவை அனுப்பி வைக்கிறார்.
4. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கான அரசியல் சாசன பிரிவு 111, 200 மற்றும் 201 ஆகிய சட்டவிதிகளில் வரம்புகள் எந்த அளவிற்கு இருக்கிறது.
5. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கான கால அளவை நிர்ணயிக்க முடியுமா ?.
6. ஒரு மசோதாவை ஆளுநர் முதல் முறையாக திருப்பி அனுப்புகிறார், இரண்டாவது முறையாகவும் அதே மசோதா அவரிடம் சமர்ப்பிக்கப்படுகின்றது. இந்த முறை ஒப்புதலை வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கிறார். மீண்டும் அதே மசோதாவை சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்புகிறது. இதை கையாளும் அரசியல் சாசன பிரிவு 200 இதை எப்படி எடுத்தாள்கிறது.
7. குடியரசுத் தலைவர் மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி சட்டப்பேரவையை முடிவெடுக்க அறிவுறுத்துமாறு ஆளுநரை கேட்டுக்கொள்கிறார் என்றால், அதே மசோதாவை ஆளுநர் மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியுமா?
The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி இன்று காலை 10.30 மணிக்குள் விளக்கமளிக்க கெடு appeared first on Dinakaran.