சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர் என் ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 14 முதல் ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், பட்ஜெட் மீதான விவாதம், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மற்றும் 18 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. அவற்றில், அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். நிதித்துறை சார்ந்த இந்த 4 மசோதாக்கள், நிதி ஒதுக்கீடு தொடர்பான சட்ட முன்வடிவுகளாகும்.
இவை மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் செலவினங்களை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது, தமிழ்நாடு அரசின் நிதி நிர்வாகத்திற்கு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. அனுப்பப்பட்ட மொத்தம் 18 மசோதாக்களில் 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றில், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவும் ஒன்றாகும். இந்த மசோதாக்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
The post தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..!! appeared first on Dinakaran.