சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இன்று வரை 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன என சென்னை, பெரவள்ளூர், அருள்மிகு சுந்தரவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றபின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரி ன் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (10.03.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், 15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற சென்னை, பெரவள்ளூர், அருள்மிகு சுந்தரவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்றபின், திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத திருக்கோயில்களை கண்டறிந்து குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை, பெரவள்ளூர், அருள்மிகு சுந்தரவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் ரூ.14.70 இலட்சம் செலவில் சுந்தரராஜப் பெருமாள் சன்னதி மகா மண்டபம் புதுபித்தல், ரூ.14 இலட்சம் செலவில் பிரகார தளவரிசை அமைத்தல், ரூ.13.50 இலட்சம் செலவில் அனுமன் சன்னதி மற்றும் திருமடப்பள்ளி அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.42.20 இலட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று (10.03.2025) வேத மந்திரங்கள் முழங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு முன்னிலையில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இன்று வரை 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. இன்று மட்டும் 15 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை ஆணையர் ஜ.முல்லை, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திருக்கோயில் செயல் அலுவலர் சு.நித்யகலா, இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றபின் 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.