1) தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. உங்கள் ஆட்சியை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்? உங்களுக்கு மிகுந்த மனநிறைவை அளித்த மூன்று திட்டங்களை குறிப்பிட முடியுமா?
இந்தியாவுக்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. கடைக்கோடி மனிதரின் முன்னேற்றத்தையும் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் என திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குழந்தைகள், மகளிர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் பலனளித்து வருவது வெளியாகும் ஒவ்வொரு புள்ளிவிவரங்களிலும் – ஊடகச் செய்திகளிலும் தெளிவாகிறது. எனவே, திராவிட மாடல் அரசின் திட்டங்களில் ஒன்று, இரண்டு, மூன்று என வரிசைப்படுத்த வேண்டிய அவசியமில்லை; அனைத்து திட்டங்களும் எனக்கு மன நிறைவை வழங்கக்கூடிய திட்டங்கள்தான். அதனால்தான் நான் எங்கு சென்றாலும் மக்கள் மிகுந்த அன்போடு என்னை வரவேற்று அரவணைத்துக் கொள்கின்றனர். தங்களில் ஒருவனாக என்னை நினைத்து – தங்களுடைய குறைகள் தீரும் என்ற நம்பிக்கையுடன் என்னிடம் அவர்களின் கோரிக்கைகளை வழங்குகின்றனர். இந்த அன்பையும், நம்பிக்கையையும்தான் இந்த ஆட்சியின் மதிப்பீடாக பார்க்கிறேன்.
2) இந்த நான்கு ஆண்டுகளில் ஆளுநர் மாளிகைக்கும் தமிழ்நாடு அரசிற்குமான மோதல் முற்றியது. அதன் விளைவாக, உச்சநீதிமன்றம் சென்று 10 மசோதாக்களுக்கு உங்கள் அரசு ஒப்புதல் வாங்கியது. அதன் பிறகு கூட, மோதல் முடிவு பெற்றதாக தெரியவில்லை. தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டு, தான் நடத்திய கூட்டத்தை புறக்கணிக்க வைக்கப்பட்டனர் என்று ஆளுநர் ஆர் என் ரவி குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த குற்றச்சாட்டைஎப்படி பார்க்கிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரையில், பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் காட்டிய ஜனநாயகப் பாதையில் எள்ளளவும் வழுவாமல் பயணிக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆளுநர் பதவி என்பதே தேவையற்ற ஒன்று என்பது எங்களது நிலைப்பாடாக இருந்தாலும், அந்தப் பதவி இருக்கும் வரை அந்தப் பதவியில் இருப்பவர்களுக்கு உரிய மரியாதையை தர வேண்டும் என்று நினைப்பவன். ஆனால், ஒன்றிய அரசினுடைய கைப்பாவைகளாக நடந்து கொள்ளும் ஆளுநர்கள், இந்த மண்ணுக்கும் – மக்களுக்கும் பொருந்தாத தேவையற்ற பிற்போக்கு கருத்துகளை விதைக்க முற்படுவதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை சிறுமைப்படுத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டுமல்ல, கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் ஆளுநர் பதவியில் இருந்தவர்கள் அத்துமீறியபோது, ஜனநாயகத்துக்காக களம் கண்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
அதனால்தான், ஆளுநரின் அரசியல் சட்டத்துக்கு புறம்பான மக்கள் விரோத செயல்களை – நடவடிக்கைகளை எதிர்த்து, அரசியல் சட்டத்தின்மேல் நம்பிக்கை வைத்து நீதிமன்றங்களை நாடுகிறோம். நீதிமன்றமும், நாம் எடுத்து வைக்கும் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தீர்ப்புகளை வழங்குகிறது. ஆனால், மக்களாட்சியை மதிக்காமல் செயல்படும் ஆளுநர், நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிக்காமல் செயல்படுவதையும் தன்னுடைய வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதனால் பொதுமக்களும், கல்வியாளர்களும் அவரைப் புறக்கணிப்பதாக தோன்றுகிறது. இந்தப் புறக்கணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாத அவர், அரசின்மீது கற்பனையான குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கிறார். கற்பனைக் கதைகளை எல்லாம், உண்மை என்று நம்பி செயல்படும் அவரது கற்பனைகளுக்கு நான் என்ன பதில் சொல்வது?
3) ஆளுநருக்கு எதிராக நீதிமன்றம் செல்வது, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென் மாநில முதல்வர்களை ஒருங்கிணைப்பது, மற்றும் மாநிலம்-ஒன்றியம் இடையேயான உறவுக்கு குறித்து ஆராய்வதற்கான குழு போன்ற முயற்சிகளின் மூலம் மாநில சுயாட்சியை தேர்தல் அஸ்திரமாக எடுக்கிறதா திமுக? இது மக்களிடம் எடுபடுமா?
தேர்தல் ஆதாயத்திற்காக எதையும் செய்பவன் அல்ல நான். வரலாற்றை நன்கு அறிந்தவர்கள், எங்கள் கோரிக்கைகளின் ஆழத்தை புரிந்து கொள்வார்கள். மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர்க் கொள்கைகளில் ஒன்று. மாநில மக்களுடன் நெருங்கி பணியாற்றும் மாநில அரசுகளுக்கு போதுமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றுதான் வரலாறு நெடுகிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
அதற்காகத்தான், தலைவர் கலைஞர் அவர்களும் பி.வி.ராஜமன்னார் அவர்கள் தலைமையில் ஒன்றிய – மாநில உறவுகளை ஆராய குழு அமைத்து, அதன் பரிந்துரைகளை மாநில சுயாட்சித் தீர்மானமாக நிறைவேற்றித் தந்தார். இவற்றினுடைய தொடர்ச்சியான செயல்பாடுதான், நாங்கள் அமைத்திருக்கும் மாநில சுயாட்சிக் குழுவும்! இந்த மாநில சுயாட்சிக் கொள்கையை முன்வைத்துதான் நாங்கள் எல்லாத் தேர்தல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, ஏதோ இந்தத் தேர்தலுக்காகதான் இந்த முன்னெடுப்புகளை எடுப்பதாக, இவற்றின் நோக்கங்களை திரித்து பரப்பிடும் சிலரது தீய எண்ணத்தை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
4) பாஜக எதிர்ப்பு அரசியலை வைத்துதான் திமுக தேர்தல்களில் வெற்றி பெறுகிறது என்ற ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது. மாநில சுயாட்சி போன்ற விவகாரங்களை எடுத்து தங்கள் ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியை மறைக்க பார்க்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. உங்கள் பதில்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பவளவிழாவை நிறைவு செய்துள்ள இயக்கம். இந்த இயக்கம், சமத்துவத்திற்காக – சமூக நீதிக்காக – ஒடுக்கப்பட்டோர் வாழ்வின் விடியலுக்காக போராடுகின்ற – செயலாற்றுகின்ற இயக்கம். “பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!” – என்ற பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கேற்ப, தமிழரின் இன – மான – மொழி உணர்வுகளுக்கு இழுக்கு ஏற்படும்போதெல்லாம் – அச்சுறுத்தல் ஏற்படும்போதெல்லாம் அதனை எதிர்த்து போராடுகிறோம். இந்த எதிர்ப்புகள் எல்லாம் பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பாக இருப்பதால் நீங்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், பாஜகவும் அதன் கொள்கைகளும் தேர்தலைக் கடந்து எதிர்க்கப்பட வேண்டியவை. தமிழ்நாட்டுக்கும் – தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை விளைக்கின்ற அரசியலைத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் செய்யும். அதற்குத் தடையாக உள்ளவர்களுக்கு எதிராக போராடும்.
5) இருமொழி கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை என்று நீங்கள் சட்டமன்றத்திலும் பொதுவெளியிலிலும் பல முறை கூறியுள்ளீர்கள். ஆனால், ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை நிலுவையில் வைத்துள்ளது. ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் இது போன்ற துறைகளில் மாநில அரசே அந்த நிதி சுமையை எத்தனை நாட்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியும்?
மாணவர்களுடைய அறிவியல் மனப்பான்மை, திறன் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியதுதான் சிறந்த கல்விக்கான பங்களிப்பாக இருக்க முடியும். மாணவர்கள் தங்களுடைய தாய்மொழியையும் – உலகத்துடனான தொடர்புக்கு ஆங்கிலத்தையும் கற்பதோடு, அறிவியல் – வரலாறு – கணிதம் – கணினி உள்ளிட்ட அறிவு வளர்ச்சிக்கும் வாழ்வியல் வளர்ச்சிக்கும் தேவையான படிப்புகளை படிப்பதே சரியானது. ஒருவருக்கு கல்வி நிமித்தமாகவோ, பணி நிமித்தமாகவோ வேறு ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அவரால் அதனை வேறு வழிகளில் கற்றுக் கொள்ள முடியும். இன்று அதற்கான தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. ஆனால், பள்ளிக்கல்வியில் மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று திணிப்பது மாணவர்களுக்கு நன்மை பயக்காது.
மூன்றாவது மொழி என்ற முகமூடியில் இந்தியை திணிப்பதும், மாணவர்களை கல்விச் சாலைகளில் இருந்து வெளியேற்றுவதற்காக தீட்டப்படும் திட்டங்களையும் நாம் இணைத்தேதான் பார்க்க வேண்டும். எனவேதான், இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இந்த உறுதிதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. இந்த அடித்தளத்தை அசைத்துப் பார்க்கலாம் என்று நினைத்து, தமிழ்நாட்டின் கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி இருக்கிறது. வளர்ச்சி அடைந்த ஒரு மாநிலத்தின் கல்விக்கான நிதியை குறைப்பது என்பது கழுத்தை நெரிப்பதற்குச் சமம். ஒன்றிய ஆட்சியாளர்கள் தங்களுடைய செயல்பாடுகளை மனச்சாட்சியோடு எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு அநீதி இழைப்பதை நிறுத்த வேண்டும்.
6) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும் தேர்தல் களம் இப்பொழுதே குடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. அஇஅதிமுக மற்றும் பாஜக 19 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தங்களுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து, பாஜகவின் பாதங்களை தாங்கத் தொடங்கிய அதிமுக தொடர்ந்து பாஜகவின் கைப்பாவையாகத்தான் இருந்து வருகிறது. இதில் பிரிவு – உறவு என்பது மக்களை ஏமாற்ற அவர்கள் ஆடிய நாடகம்தான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் நேரடிக் கூட்டணியாகச் சேர்ந்து நின்றாலும், கள்ளக்கூட்டணியாகத் தனிதனியாக நின்றாலும் இவர்களால் தமிழ்நாட்டுக்கு எந்தவித நன்மையும் இல்லை. ஏற்கனவே இது தோல்வி கூட்டணிதான்! இந்த முறையும் மக்கள் நிராகரிப்பார்கள்.
7) சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் அஇஅதிமுக மற்றும் பாஜக தங்கள் கூட்டணியை பலப்படுத்தப்போவதாகவும் மேலும் சில கட்சிகள் தங்கள் அணியில் இணையும் என்று கூறுகிறார்கள். அப்படி நடந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி உங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? கூட்டணி அமைந்ததால் நீங்கள் பதற்றத்தில் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியிருக்கிறாரே?
தங்களது கூட்டணிக்கும் கொள்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திரு. பழனிசாமி அவர்களே கூறியிருக்கிறார். பதற்றத்தில் கொள்கை அற்ற அவர்கள்தான் ஒன்றிணைகிறார்கள். எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை! மக்கள் திமுகவின் பக்கம் இருக்கிறார்கள்!
8) திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த மூன்று தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த முறை 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் தேர்தலை சந்திக்கவிருக்கிறீர்கள். இதே கூட்டணி நீடிக்குமா அல்லது பாமக மற்றும் தேமுதிக போன்ற காட்சிகள் இக்கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறதா? 200 இடங்களில் வெற்றி என்பது நம்பிக்கையா, அதி நம்பிக்கையா?
தமிழ்நாட்டின் வளர்ச்சி – தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது. கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது. ‘எல்லார்க்கும் எல்லாம்‘ என்ற சமத்துவ – சமூகநீதிப் பாதையில் சிறப்பாக செயல்படுகிறது. அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வெற்றியை வழங்குகின்றனர். இந்த வெற்றி பயணம் தொடரும்!
9) அஇஅதிமுக-பாஜக கூட்டணி திமுக ஆட்சியின் மீது வைக்கும் பிரதான குற்றசாட்டு ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தான். உங்கள் அமைச்சரவை சகாக்கள் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அடிக்கடி உங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அல்லது அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்துகிறது. உங்கள் பதில் என்ன?
திராவிட மாடல் அரசின் கீழ் சிறந்த நிர்வாகத்தை கொடுத்திருக்கிறோம். அதிமுக சீரழித்த நிர்வாகத்தை செம்மைப் படுத்தியிருக்கிறோம். அரசின் பல்வேறு சாதனைகளைப் பார்த்து – மகளிருக்கு நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களைப் பார்த்து பொறாமைப்படுவோர்- அதை திசை திருப்ப அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். பாஜக முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ன ஆகின்றன என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறையின் சோதனைகளைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கும், பிற கட்சிகளை மிரட்டி கூட்டணி வைப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஆயுதமாகும். மொத்தத்தில் ED என்பது பாஜக வாஷிங் மெஷினுக்கான ஏஜென்ட் என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். நாங்கள் மக்கள் மேலும் – எங்களின் வளர்ச்சி திட்டங்களின் மீதும்-நீதியின் மேலும் நம்பிக்கை வைத்து மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்!
10) ஏப்ரல் 18 அன்று நடந்த ஒரு அரசு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையான விமர்சிக்க காரணம் என்ன? தமிழ்நாடு தேர்தலில் அவர் அதிக அக்கறை கொள்வதாலா, அல்லது அவருடைய குற்றச்சாட்டிற்கு பதிலா? கூட்டணி ஆட்சி தான் அமையும் என்ற அமித் ஷாவின் வாதம் ஏற்புடையதா? தமிழ்நாட்டு மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக் கொள்வார்களா?
2016 தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டுக்கு வந்த அமித் ஷா அவர்கள் இந்தியாவிலேயே அதிமுக அரசுதான் மிகவும் ஊழல் நிறைந்த அரசு என்று விமர்சித்தார். இப்போது அதே அதிமுகவுடன் அவரும் – அவரது கட்சியும் உறவாடிக் கொண்டிருக்கிறது. “எத்தை தின்றால் பித்தம் தெளியும்“ என்ற நிலையில் எதையாவது சொல்லி தமிழ்நாட்டிற்குள் கால் பதித்து விடலாமா என்று பாஜக எண்ணுகிறது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் அந்தக் கட்சியினர் வெளியிடும் பொருளற்ற கருத்துகள். அவற்றுக்கும், அவர்களின் உள்நோக்கம் கொண்ட விமர்சனங்களுக்கும் பதிலளிப்பதில் நான் மட்டுமல்ல பிற அரசியல் கட்சித் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பாஜக தமிழ்நாட்டிற்கு செய்துவரும் கேடுகளையும், ஜனநாயகத்துக்கு ஏற்படுத்திவரும் இழுக்குகளையும் மக்கள் மன்றத்தில் நாம் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குவோம். அவர்கள் மக்களுக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்
The post தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெக்கான் ஹெரால்டு நாளிதழுக்கு அளித்த பேட்டி appeared first on Dinakaran.