சென்னை: தமிழகம் முழுவதும் 22,931 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்அமைக்கும் பணி முடிவடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு தொழில் நுட்பத்துடன் கூடிய கற்றல் சூழலை உருவாக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 22,931 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) அமைக்கும் பணியை கடந்த ஜூன் 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணி முடிந்துள்ளது.
இறுதியாக நடந்த சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளியில் முடிக்க இந்த ஸ்மார்ட் கிளாஸ் நிறுவும் பணியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: அரசுத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 11 லட்சத்து 76,452 மாணவ மாணவியர் பயனடையும் வகையில் ரூ.455 கோடி மதிப்பில் 22931 திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல அரசுப் பள்ளிகளில் 8209 உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ரூ.519 கோடியில் அமைக்கும் பணியும் முடிய உள்ளது. இந்த இரண்டு திட்டங்களும், முழுமை அடையும்போது, 43 லட்சத்து 89 ஆயிரம் மாணவ மாணவியர் பயன் பெறுவர்.
கடந்த மூன்றரை ஆண்டில் நாம் கல்வித்துறையில் நிறைய செய்துள்ளோம். தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறைந்துள்ளதாக ஆளுநர் தெரிவிப்பது கண்டனத்துக்குரியது. அவர் நாளொரு மேனியும் தமிழ்நாட்டைப் பற்றி ஏதாவது கூறிவருகிறார். ஒரு நாள் புகழ்கிறார். மறுநாள் எதிர்க்கிறார். மேலும், தேசிய கீதம் எப்போது பாடப்பட வேண்டும் என்றுகூடத் தெரியாத நிலையில் இருக்கிறார். தமிழகத் கல்வித் தரம் பற்றி அவர் கூறுவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் கூறுவது என்னவென்றால், மாணவர்களுக்கு கூட்டல் கழித்தல் கணக்கு தெரியவில்லை என்கிறார். இது ஆசிரியர்களையும், மாணவர்களின் மனநிலையில் தாக்கத்தையும் ஏற்படுத்தும் செயல் ஆகும். குற்றம் சாட்டுவது போல சொல்கிறார். இது தவறு, எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அரசுப் பள்ளிகளில் 2014ம் ஆண்டுக்கும் 2024ம் ஆண்டுக்கும் ஒப்பிடும்போது இடைநிற்றல் குறைந்துள்ளது. மாணவர்களுக்கு மனஅழுத்தம் இல்லாமல் புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
The post தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவும் பணி முடிந்தது: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.