சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்டன. சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஏராளமானோர் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் மருந்தகங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
அதாவது சென்னையில் 33 இடங்களிலும், மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்குகிறது. இதில் 50 சதவீத தொகையானது ரொக்கமாகவும் மீதமுள்ள 50 சதவீதம் மருந்துகள் வடிவத்திலும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். தியாகராயர் நகர், செளந்தரபாண்டியனார் அங்காடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
The post தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.