சென்னை: தமிழ்நாடு முழுவதும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 7, 557 பள்ளிகளில் இருந்து 8.23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 64,126 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த தேர்வில் 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 மாணவ மாணவியர் எழுத பதிவு செய்துள்ளனர். தேர்வுகள் 27ம் தேதி வரை நடக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்1 வகுப்பில் படிக்கும் மாணவ மாணவியருக்கான ஆண்டுப் பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
இந்த தேர்வில் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 7557 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளனர். இவர்களில் பள்ளிகளில் படிக்கின்றவர்களை பொருத்தவரையில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 பேர் மாணவியர்.
இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 4755 பேரும், சிறைவாசிகள் 137 பேர் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். இவர்களுக்காக தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 3316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி. மதியம் 1.15 மணிக்கு முடியும். முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கு தேர்வு நடக்கும். 27ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன.
தேர்வு மையங்களை கண்காணிக்க பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை 4470 அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 44 ஆயிரத்து 236 கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post தமிழ்நாடு முழுவதும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.