திருவள்ளூர்: தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் மூலம் பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் பொன்னேரி பழவேற்காடு சாலையில் பஜார் வீதியில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்; தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் மூலம் பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது.
பாஜகவின் அநீதியை கண்டிக்கின்ற ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். ஆளுநர் ரவி வந்ததில் இருந்தே உயர் கல்வித்துறைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில்தான் ஈடுபடுகிறார். அனைத்து தடைகளையும் முறியடித்து உயர் கல்வித்துறையை உச்சத்துக்கு கொண்டு செல்வோம். பாசிச வெறி பிடித்த பாஜக தமிழ்நாட்டையும், தமிழ்நாடு முதல்வரையும் வஞ்சிக்கிறது. கலைஞர் பல்கலை. அமைப்பது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.
நானும் உயர்கல்வி செயலரும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டும் இன்னும் ஒதுக்கவில்லை. எடப்பாடி, அண்ணாமலை, நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட நாடக கம்பெனிகள் எத்தனை பேர் களத்தில் நின்றாலும் அரசியல் களத்தில் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான் என்று கூறினார்.
The post தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் மூலம் முட்டுக்கட்டை போடுகிறது பாஜக அரசு: அமைச்சர் கோவி.செழியன் appeared first on Dinakaran.