சென்னை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம். தமிழ்நாட்டின் உரிமைக்காக யாருக்கும் பயப்படாமல் போராடுவோம். இதே பொறுப்புணர்வுடன் மக்களாட்சியை நடத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 1989-ல் முதலமைச்சராக இருந்த கலைஞர் 7.5.1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலைஞர் சட்டமன்றத்திற்கு வந்திருந்தார். அவர் வரும்போது கையில் ஆங்கில புத்தகம் ஒன்றை எடுத்து வந்தார். அது நீதிக்கட்சி காலத்து வரலாற்று நூல்.
அந்த நூலில் இருக்கின்ற 1929ம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டு நிகழ்ச்சிகளை முதல்வர் கலைஞர் வாசித்தார். அதை அப்படியே சொல்கிறேன். “1929ம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்போது எனக்கு 5 வயதுதான். கலைஞர் சொல்கிறார் எனக்கு 5 வயது. 60 ஆண்டுகள் கழித்து என்னுடைய 65வது வயதில், இதை சட்டமாக கொண்டு வருகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அத்தகைய சுயமரியாதை மாநாட்டுக்கு அடிகோலிய பெரியார் வாழ்க! அவரது வழித்தோன்றல் அண்ணா வாழ்க! என்று சொல்லி, இந்த சட்டத்தை அனைவரும் நிறைவேற்றித் தரவேண்டும்’’ என்று பேசினார்.
இப்போது அதை உச்சநீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும்; பெண்களுக்கு கல்வி வேண்டும்; வேலைகள் வேண்டும்; ஆசிரியப் பணி தரவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்த காலத்தை எல்லாம் கடந்து, இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்சுகின்ற காலத்தை பார்க்கின்றோம். மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை, மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயண வசதி, புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் என எண்ணற்ற திட்டங்கள். நீண்ட காலமாக, நகர்ப்புற பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்குகின்ற திட்டத்தை இந்த மாவட்டத்தில் முதலில் நான் துவங்கி வைத்திருக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தினால் பல ஆயிரம் குடும்பங்கள் விரைவில் பயனடைய போகிறார்கள். இப்படி, துரிதமாக செயல்படுகின்ற காரணத்தால் தான் இந்தியாவின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இன்றைக்கு உயர்ந்திருக்கிறது. நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். மும்மொழிக் கொள்கையை, அதாவது இந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 2 ஆயிரம் கோடி ரூபாயை தருவோம் என்று திமிராக பேசுகிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
கல்வியை தனியார்மயம் ஆக்குவது, பணக்காரர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியில் உயர்ந்திருக்கிறது. நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். மும்மொழிக் கொள்கையை, அதாவது இந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரம் கோடியை தருவோம் என்று திமிராக பேசுகிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
கல்வியை தனியார்மயம் ஆக்குவது, பணக்காரர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியில் மதவாதத்தை புகுத்துவது, சிறிய பிள்ளைகளுக்கு கூட பொதுத்தேர்வு, கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு, கல்வியில் ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கிறது – இப்படி நிறைய இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம். ஆனால், ‘இதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் தான் உங்கள் நிதி உங்கள் கைக்கு வரும்’ என்று பிளாக்மெயில் செய்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
2000 கோடி இல்லை, நீங்கள் 10 ஆயிரம் கோடி வழங்கினாலும், உங்களுடைய நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக நான் சொன்னேன். இந்த மேடையில் அதைத்தான் மறுபடியும் சொல்கிறேன். உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள், அராஜகவாதிகள் என்று’ நாடாளுமன்றத்தில் நாவடக்கம் இல்லாமல் தர்மேந்திர பிரதான் பேசியிருக்கிறார். ஆனால் பேசிய அரைமணி நேரத்தில் அவர் பேசியதை திரும்பப் பெற வைத்திருக்கிறார்கள் நம்முடைய தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
அவர்களுடைய போர்க்குரலுக்கு என்னுடைய வாழ்த்துகள். அதிமுக உறுப்பினர்கள் போல பாஜக அரசுக்கு லாலி பாடிக்கொண்டு இல்லாமல் தமிழ்நாட்டின் உரிமைக்கு யாருக்கும் பயப்படாமல் போராடுவோம் என்று நிரூபித்திருக்கிறார்கள். ‘40 பேர் சென்று என்ன செய்வார்கள்?’ என்று கேட்டவர்களுக்கெல்லாம் நேற்று சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. இதே போர்க்குணத்துடன் தமிழ்நாட்டுக்காக போராடுவோம். இதே பொறுப்புணர்வுடன் மக்களாட்சியை நடத்துவோம். அதற்கு இப்போது போல் எப்போதும் உங்களுடைய ஆதரவு தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, கேகே எஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, செல்வம், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், ராஜா, இ.கருணாநிதி, அரவிந்த் ரமேஷ், பாலாஜி, எம்.பாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, நில நிர்வாக ஆணையர் பழனிச்சாமி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அருண்ராஜ், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாவட்ட ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* 4 ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செய்த பணிகள்
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தை வளர்த்தெடுக்க ஏராளமான பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சில முத்திரை திட்டங்களை மட்டும் நான் தலைப்பு செய்தியாக சொல்ல விரும்புகிறேன்.
* கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைக்கப்பட்டதோடு 6 ஏக்கர் பரப்பளவில், நீரூற்றுடன் கூடிய புதிய பூங்காவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
* செங்கல்பட்டில் தனியார் பங்களிப்புடன் ரூ.97 கோடியில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
* மாமல்லபுரத்தில் ரூ.74 கோடியில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
* வரதராஜபுரம், முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமான பணி ரூ.42 கோடியே 70 லட்சத்தில் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
* நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ரூ.4,276 கோடியில் நடைபெற்று வருகிறது.
* தாம்பரம் அரசு மருத்துவமனையை ரூ.110 கோடி மதிப்பீட்டில் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்துகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
* செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ.15 கோடியில், மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
* பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரத்தில், ரூ.25 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.
* ரூ.43 கோடியில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், ஒருங்கிணைந்த பயிற்சி மையம் மற்றும் அரசு பாதுகாப்பு இல்லம் ஆத்தூர் கிராமத்தில் திறக்கப்பட்டிருக்கிறது.
* செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை உணவகம் பயன்பாட்டில் இருக்கிறது.
* நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஒரு புதிய அறிவிப்பையும் இந்த விழா மூலமாக நான் அறிவிக்க விரும்புகிறேன். செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கின்ற வகையில், செய்யூரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும். அதன் திறப்பு விழாவுக்கு நானே வருவேன் என்று முதல் கூறினார்.
* சிறுதொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏராளமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை உருவாக்கி, தமிழ்நாட்டின் சிறுதொழில் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரக்கூடியவர் அமைச்சர் தா.மோ.அன்பரசன். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு இருக்கிறது என்றால், அதில் இவருடைய பங்கும் இருக்கிறது. அவருடைய அமைதியான, அக்கறையான, உண்மையான உழைப்பின் மூலமாக, தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதேபோல, தமிழ்நாட்டின் தொழில் துறையில் பெண்கள் அதிகமான அளவு பணியாற்றுவதற்கும் அவருடைய துறையின் பங்களிப்பு முக்கிய பங்காற்றி வருகிறது. அத்தகைய அவர், செங்கல்பட்டு மாவட்டத்தை வளர்ச்சி மிகுந்த மாவட்டமாக அவர் வளர்த்து வருகிறார். அவருக்கும், இந்த மாவட்ட ஆட்சியர் அருண்ராஜுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டின் உரிமைக்காக யாருக்கும் பயப்படாமல் போராடுவோம்: தேசியக் கல்வி கொள்கையை உறுதியாக ஏற்க மாட்டோம், செங்கல்பட்டு அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.