சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான கடல் ஆமைகளின் இறந்த உடல்கள் கரையொதுங்குவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, நிலைமையை கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு கீழ்க்கண்ட தகுந்த நடவடிக்கைகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் 5 நாட்டிகல் மைல்கள் தூரம் வரை மீன்பிடிக் கப்பல்கள், இழுவை மடிவலைகளை பயன்படுத்தக்கூடாது என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஜிபிஎஸ் டிரான்ஸ்பாண்டர்களை அணைத்து வைக்கக்கூடாது என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் ஆமைகள் நடமாட்டம், இனப்பெருக்கம் உள்ளிட்ட தகவல்களை பரிமாறிக் கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டு ரோந்துக் குழு கடல் பகுதிகளில் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் கடற்கரை பகுதிகளிலும் தெரு நாய் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. இ்த்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் ஆமைகள் இறந்து கரையொதுங்குவது கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகள் இனப்பெருக்கம் பாதுகாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.