சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தவறி வாட்டி வதைக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை காலம் முடிந்தாலும் தமிழ்நாட்டின் பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. ஏ.சி. உள்ளிட்ட மின்சாதன பயன்பாடுகளால் கடந்த 1ம் தேதி பிறகு மாநிலத்தின் தினசரி மின் விநியோகம் 40 கோடி யூனிட்டுக்கு மேல் பதிவானது. கடந்த 1985ம் ஆண்டில் சென்னையில் 48% ஆக்கிரமித்து இருந்த கட்டிடங்கள் 30 ஆண்டுகளில் 26% கூடுதலாகி 74% ஆக அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை கூறுகிறது. சென்னையின் வெப்பநிலை அதிகரிக்க இது முக்கிய காரணியாக உள்ளது.
தமிழ்நாட்டில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 380 வட்டாரங்களில் 11 மாவட்டங்களை சேர்ந்த 94 வட்டாரங்களில் வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 11 மாவட்டங்களின் வெப்பநிலை மாநில சராசரியை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. சென்னை, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களின் 25 வட்டாரங்களில் வெப்பம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த மாவட்டங்கள் வெப்ப அபாய அச்சத்தில் உள்ளன. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இரவு நேர வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.
சென்னை, சேலம், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட அடர்த்தியான நகரங்களில் இரவு நேர நில மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 23 ஆண்டுகளில் இந்த நகரங்களில் இரவு நேர வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் 17 மலை பகுதி மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்ததற்கு நகரமயமாக்கலும், காடுகள் அழிப்புமே காரணம் என தெரிய வந்துள்ளது. இப்பகுதிகளில் 23 ஆண்டுகளில் 3,000 சதுர கி.மீ. காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
அரசின் அனைத்து துறைகளும் இந்த ஆய்வறிக்கையை தீவிர கவனத்தில் கொண்டு தங்கள் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது. தொடர் வெப்பநிலை கணிப்பில் அதிக பாதிப்புள்ள வட்டாரங்களுக்கு முன்னரிமை, இயற்கையான குளிரூட்டும் தீர்வுகளை ஏற்பது மற்றும் காலநிலை உணர்திறன் கொண்ட கட்டட தொழில்நுட்பங்களை செயல்படுத்துதலை மாநில திட்டக்குழு அரசு பரிந்துரைத்துள்ளது.
The post தமிழ்நாட்டில் பருவம் தவறி வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் அவதி: நகரமயமாக்கல், காடுகள் – நீர்நிலைகள் அழிப்பால் வெப்பமடையும் புவி appeared first on Dinakaran.