சென்னை: மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது திமுக எம்பி இரா.கிரிராஜனின் கேள்விக்கு, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்டு, வரும் 2 ஆண்டுகளில் 6440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஏற்ப, அங்கு மின் உற்பத்தி திறனை அதிகரிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என்று மாநிலங்களவை கூட்டத்தொடரின்போது திமுக எம்பி இரா.கிரிராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து ஒன்றிய மின்துறை இணை அமைச்சர் பாத் நாயக் பேசுகையில், “தற்போது தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறன் 41 ஆயிரத்து 741 மெகாவாட்டாக உள்ளது. இவற்றை அதிகரிக்கும் வகையில், வரும் 2 ஆண்டுகளில் அனல் மின்சாரம் மூலம் 3440 மெகாவாட், புனல் மின்சாரம் மூலம் 500 மெகாவாட் மின் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும். அணுமின் நிலையம் மூலம் 2500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தமிழ்நாட்டுக்கு 1251.8 மெகாவாட் மின்திறன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 6900 மெகாவாட் மின்திறன் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தியை புதுப்பிக்கத்தக்க துறையில், தனியார் நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவிக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 2023-24 மற்றும் 2027-28ம் நிதியாண்டு வரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் ஏலங்களை வெளியிட்டுள்ளது. இதில் அன்னிய நேரடி முதலீடு 100 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே மின் விற்பனை செய்வதற்கு விதிக்கப்படும் இன்டர்ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் கட்டணங்கள் வரும் ஜுன் 30ம் தேதிக்குள் செயல்படுத்தப்படும். சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத் திட்டங்கள் வரும் 2030ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும். பசுமை ஹைட்ரஜன் திட்டங்கள் வரும் 2032ம் ஆண்டில் செயல்படுத்தப்படும். கடலோர காற்றாலை திட்டங்களுக்கும் டிரான்ஸ்மிஷன் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 6440 மெகாவாட் மின் உற்பத்தி ஆலைகள்: திமுக எம்பி கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.