சென்னை: “நிதிநிலையை மேம்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவால், ஒருமுறை கூட வருவாய்ப் பற்றாக்குறை இலக்குகளை எட்ட முடியவில்லை.மதுவணிகத்தின் மூலமான வருவாயை நம்பியும், பத்திரப் பதிவுக் கட்டணங்களை உயர்த்துவதை நம்பியும் நடத்தப்படும் திமுக ஆட்சியில் நிதிநிலை மேம்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. நடப்பாண்டில் அடைக்கப்பட வேண்டிய ரூ.49,638 கோடி கடனை அடைப்பதற்கு தேவையான நிதி தமிழக அரசிடம் இல்லாத நிலையில், அதற்கும் சேர்த்து நடப்பாண்டில் ரூ.1,55,584 கோடி கடன் வாங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களின் நிதி நிலைமை குறித்த விவரங்களுடன் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023-ம் ஆண்டுக்கான நிதிநலக் குறியீடு என்ற ஆவணத்தின்படி, நிதி மேலாண்மையில் தமிழ்நாடு 11-ம் இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. செலவுகளின் தரம், கடன்களைத் தாக்குபிடிக்கும் திறன் ஆகியவற்றில் முறையே 14, 16 ஆம் இடங்களுக்கு தமிழகம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டு நிதிநிலைமையின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கவலை எழுந்திருக்கிறது.