சென்னை: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், மே 13ம் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த இக்கொடூர சம்பவத்தில், 9 பேரை சிபிஐ கைது செய்தது.
2019ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் 8க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, பின்னர் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு பின்பு வன்கொடுமை வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டது.
2019ம் ஆண்டு பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரீசன், வசந்தகுமார், சதீஸ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் நடந்த விசாரணையில் பாபு என்கிற பைக் பாபு, அருளானந்தம் உள்ளிட்டோர் 2021ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 8 பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சி அளித்துள்ளனர். வழக்கின் விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட 9 நபர்களும் வீடியோ மூலம் நீதிபதியின் முன்பு ஆஜராகியிருந்தனர். அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவுபெற்ற நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் சட்டவிதிகள் 313ன் கீழ் கேள்விகள் கேட்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி தெரிவித்திருந்தனர்.
அதனடிப்படையில் நீண்டகாலமாக வீடியோ மூலம் ஆஜரான குற்றவாளிகள் நேரடியாக சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் தரப்பு மற்றும் இருப்பிட மருத்துவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தரப்பினரிடம் இறுதியாக விசாரணை நடத்தப்பட்டது.
இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மே மாதம் 13ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என கோவை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் தீர்ப்பு மே மாதம் 13ம் தேதி வெளியாகிறது.
The post தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு! appeared first on Dinakaran.