சென்னை: தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில உரிமைகளை சிதைத்து, மாநில சுயாட்சியை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 2023ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி உரையாற்றிய போது, மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்கவில்லை. ’அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவை குறிப்பில் இடம்பெறும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போதே நேருக்கு நேர் பதிலடி கொடுத்ததும், ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார். 2024ம் ஆண்டு ஆளுநர் உரையின் தொடக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனக்கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ரவி. முந்தைய ஆண்டில் கூறிய அதே துருப்பிடித்த ஆயுதத்தை இந்த ஆண்டும் மீண்டும் தூக்கி கொண்டு வந்து, அவையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறியிருக்கிறார் ஆளுநர் ரவி. தொடக்கத்தில் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உரையை படிக்காமல் வெளியேறியதாக ஆளுநர் அளித்த விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.
சில மாதங்கள் முன்பு பிரசார் பாரதியின் இந்தி மாத விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டது. இப்போது தேசிய கீதம் முதலில் பாடவில்லை என சொல்லி மறைமுகமாக தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் எதிர்த்திருக்கிறார். அன்று தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்பதை விடுத்துவிட்டு பாடி நமது தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தார். இன்று சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதை சகித்துக் கொள்ளாமல் ஆளுநர் ரவி, தேசிய கீதம் என்ற போர்வையை போர்த்தி கொண்டு உடனடியாக சபையை விட்டு வெளியேறி, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருக்கிறார். ஆளுநர் உரையின் போது தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் பாடப்பட்டு வருவதுதான் நடைமுறை. இதனை தகர்ந்து ஆளுநர் ஒருவரே நடந்து கொள்கிறார் என்றால், அது அரசியல் அல்லாமல் என்னவாக இருக்க முடியும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தனித்து செயல்படுவது மக்களாட்சியை அவமதிக்கும் செயல்.
இந்திய அரசியல் சாசனத்திற்கே எதிரானதாகும். குஜராத் முதல்வர் மோடி இருந்த போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு, லோக் ஆயுக்தா விவகாரங்களில் ஆளுநர் கமலா பெனிவாலுடன் மல்லுக் கட்டினார். இதனால் கோபம் அடைந்த முதல்வர் மோடி மாநில உரிமையை நிலைநாட்ட அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பினார். ‘கூட்டாட்சிக் கொள்கைகளை மீறும் கவர்னரை திரும்ப அழைக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும்’ என்று கடிதத்தில் மோடி குறிப்பிட்டிருந்தார். அந்த மோடி பிரதமர் ஆன பிறகு பாஜவை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் இடையூறு செய்து வருகிறார். தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜ கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் 7ம் தேதி(இன்று) காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இது மாநில உரிமைக்கான போர். இதில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டை அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு appeared first on Dinakaran.