படிப்பறிவு
தமிழ்நாடு படிப்பறிவில் முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக திகழ்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டு மக்களின் 80.1 சதவீதம் பேர் படிப்பறிவு உள்ளவர்கள். இது தேசிய சராசரியான 74.04 சதவீதத்தைவிட அதிகமாகும். இப்போது கணக்கெடுத்தால் தமிழ்நாட்டில படிப்பறிவு 80 சதவீதத்தை தாண்டியிருக்கும். குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 98.8 சதவீதம் பேர் பள்ளிகளில் சேர்ந்து 8ம் வகுப்பு வரை படிக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் உலகின் முன்னேறிய நாடுகளோடு ஒப்பிடக்கூடிய சாதனையாகும். 81.5 சதவீத குழந்தைகள் மேல்நிலை கல்வியில் சேர்கிறார்கள். இந்தி மட்டுமே சொல்லித் தரும் மாநிலங்கள் மாணவர்கள் சேர்க்கையில் இந்த நிலையை எட்ட இன்னும் ஒரு நூற்றாண்டாவது ஆகும். தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவர்களில் 69 சதவீதம் பேர் ஆங்கில வழி கல்வி பயில்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். கடந்த 2006ல் இருந்து பள்ளிகளில் கட்டாய தமிழ் மொழி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் கலாச்சாரம், தமிழ் மொழியின் தொன்மை மாணவர்களுக்கு புகட்டப்படுகிறது.
வேலை வாய்ப்பு
பட்டம் பெறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தமிழ்நாடு முன்னோடிதான். தனியார் துறை, தகவல் தொழில்நுட்ப துறையில்(ஐடி) வேலைவாய்ப்பு தமிழ்நாட்டில் கொட்டிக் கிடக்கிறது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் தமிழ்நாடு அரசு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். புதிய இன்ஜினியர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு நாட்டிலேயே மூன்றாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சம் இன்ஜினியர்கள் படித்து பட்டம் பெறுகிறார்கள். பள்ளி பருவத்தில் இருந்தே ஆங்கில வழியில் கல்வி கற்பதால் தமிழக மாணவர்களின் ஆங்கில புலமை சர்வதேச தரத்தில் உள்ளது. விளைவு, பட்டப்படிப்பு முடித்ததும் பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்களில் எளிதாக வேலை கிடைக்கிறது. தமிழ்நாட்டில் அரசு வேலை வேண்டும் என்றால் கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு வேலைக்கு நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டு அரசு வேலை தமிழ் தெரிந்தவர்களுக்கே என்பதால் உள்ளூர் இளைஞர்கள் அதிகம் பலன் பெறுகின்றனர்.
தொழில் வளர்ச்சி
ஆட்டோமொபைல், ஜவுளி, எலக்ட்ரானிக் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்திய மாநிலங்களில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்டது தமிழ்நாடு. மாநிலத்தின் மொத்த உற்பத்தி கடந்த 2023-24ல் ரூ.34.19 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். இங்கு 39,666 தொழில் நிறுவனங்கள் உள்ளன. பிரதமர் மோடி திட்டங்களையும் பல லட்சம் கோடிகளை கொட்டியும் 31,031 தொழில் நிறுவனங்களுடன் குஜராத் 2வது இடத்தில்தான் உள்ளது. ரூ.28 ஆயிரம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீட்டை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் படித்த அனைவருக்கும் ஆங்கிலம் தெரிந்ததுதான் முக்கிய காரணம். இதனால்தான் பன்னாட்டு நிறுவனங்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு திகழ்கிறது.
சேவை துறை
ஆங்கிலம் தெரிந்த ஊழியர்கள், பொறியாளர்கள்தான் ஐடி, பிபீஓ நிறுவனங்களின் முதுகெலும்பு. தமிழகத்தில் ஆங்கிலம் தெரியாத பட்டதாரிகளோ, பொறியாளர்களோ கிடையாது. விளைவு, ஐடி நிறுவனங்கள் விரும்பி தொழில் தொடங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம். டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், சிடிஎஸ், ஆக்செஞ்சர் போன்ற இந்திய நிறுவனங்கள் மட்டுமல்லாது பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் புதிதாக முதலீடு செய்ய தேர்வு செய்வது தமிழ்நாட்டைதான். ஒருகாலத்தில் சென்னையில் மட்டுமே இருந்த ஐடி நிறுவனங்கள் இப்போது, இரண்டாம் கட்ட நகரங்களான கோவை, திருச்சி, மதுரை, நெல்லை என்று அரசு ஆதரவோடு கிளை பரப்பி வருகின்றன. இளைஞர்களுக்கு படித்து முடித்ததும் உள்ளூரிலேயே வேலை, கைநிறைய சம்பளம். இதை கொடுத்தது இருமொழி கொள்கைதான். ஆங்கில வழி கல்வி தான்.
உயர் கல்வி, ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் பள்ளி படிப்பை முடித்ததும் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 51 சதவீதமாக இருக்கிறது. இது இந்தியாவிலேயே மிக அதிகமாகும். அகில இந்திய அளவில் இது 28.3 சதவீதமாக இருக்கிறது. பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்களில் 75 சதவீதம் பேரை உயர் கல்வியில் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை அடுத்த 5 ஆண்டில் தமிழ்நாடு அடைந்துவிடும். ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கின்றன. தொழில்நுட்ப கல்வி ஆங்கிலத்தில் கிடைப்பதாலேயே ஆராய்ச்சி பணிகள் அதிக அளவில் நடக்கின்றன.
பெண் கல்வி
பெண்கள் அதிகம் கல்வி கற்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பெண்கள் படிப்பறிவில் தேசிய சராசரி 65.46 சதவீதம். ஆனால், தமிழ்நாட்டு பெண்களில் 73.86 சதவீதம் பேர் படிப்பறிவு உள்ளவர்கள் என்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிகிறது. இன்றைக்கு அது 80 சதவீதத்தை தாண்டி இருக்கும். பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் உயர் கல்விக்காக சேரும் பெண்கள் 49 சதவீதம்.
ஐடி, தனியார் வேலைகளில் பெண்கள்
ஆங்கிலம் தெரிந்ததால் தமிழ்நாட்டு பெண்களுக்கு வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள், பிபீஓக்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிக சம்பளம் கிடைக்க பெண்களுக்கு உதவுவது அவர்களது ஆங்கில மொழித்திறன்தான். சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களில் 35 சதவீதம் பேர் பெண்கள் என்பது பெரிய சாதனை. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பை பொறுத்தவரை, 30 சதவீதம் பெண்களுக்கு அதுவும் தமிழ் தெரிந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வளர்ச்சி
தமிழக அரசியல் கட்சிகளில் பெண்களின் பங்களிப்பு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது அதிகம். தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் இருமொழி கொள்கையால் பள்ளி படிப்பு மட்டுமல்லாது கல்லூரி படிப்பில் சேரும் பெண்கள் எண்ணிக்கை அதிகம், கல்லூரி வரை படித்து முடித்து அதன் பிறகு வேலைக்கும் சேர்ந்துவிடுவதால் பெண்களிடையே சிறுவயது திருமணங்கள் பெருமளவு குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை 33 சதவீதமாக இருக்கிறது. இது தேசிய சராசரியான 25 சதவீதத்தைவிட அதிகம் என்பதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இப்படி இருமொழி கொள்கையால் பெண்களின் வாழ்க்கை தரம் அதிகரித்துள்ளது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை படித்ததன் மூலம் தமிழ்நாடு மேற்கண்ட சாதனைகளை படைத்துள்ளது. மும்மொழி அதிலும் குறிப்பாக மூன்றாவது மொழியாக இந்தியை படித்தால்தான் முன்னேற முடியும் என்று ஒன்றிய அரசு கூறுவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் நிரூபித்துள்ளன. இந்தி மட்டுமே மாணவர்களுக்கு கற்பிக்கும் வட மாநிலங்கள் தமிழ்நாடு தற்போது பெற்றுள்ள வளர்ச்சியை பெறுவதற்கு இன்னும் 30 ஆண்டுகளானாலும் வாய்ப்பில்லை என்பதே பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.
The post தமிழ், ஆங்கிலத்தின் துணை கொண்டு உலக அரங்கில் வெற்றி நடை: இந்தியை எதிர்த்து தமிழ்நாடு சாதித்தது என்ன? appeared first on Dinakaran.