சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் இயல்பான மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் நாடகத்தில் இருந்து, கொத்து கொத்தாக சினிமாவுக்கு வந்தவர்கள், தவிர்க்க முடியாத நடிகர்களாக மாறினார்கள். இப்போது அவர்களே நமது முன்னோடி அடையாளங்களாக இருக்கிறார்கள். பிறகு சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள், சினிமாவில் தங்களுக்கான இடத்தைப் போராடிப் பிடித்திருக்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம் என பலரை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.
அதே போல யாராவது ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தால்தான் சினிமா இயக்க முடியும் என்கிற இலக்கணத்தை உடைத்து, யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் குறும்படங்கள் இயக்கிவிட்டு வந்து பலர், தமிழ் சினிமாவின் 'டைரக்டர்’ இருக்கையைக் கட்டியாகப் பிடித்திருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், ‘சித்தா’ அருண்குமார் என உதாரணமாகப் பலரைச் சொல்லலாம். இதன் அடுத்த கட்டமாக, இப்போது யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள ‘இன்புளூயன்ஸர்’கள் சினிமாவுக்கு வருவது அதிகரித்து வருகிறது.