திருநெல்வேலி: “வருங்காலங்களில் பள்ளிகளுக்கான நிதியை நிறுத்திவிட்டு தனியார் பெரு நிறுவனங்களிடம் பள்ளிகளை ஒப்படைத்துவிட்டு தனியார் மயமாக்க புதிய கல்விக் கொள்கைத் திட்டம் வழிவகை செய்யும். இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் படித்துக் கொள்ளலாம். ஆனால் 6-ம் வகுப்புக்கு பிறகு கட்டாயம் இந்தி அல்லது சமஸ்கிருதத்தை கட்டாயம் படிக்க வேண்டும். இத்திட்டம் தமிழ் மொழியை அழிக்கும் திட்டமாக இருப்பதால் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்,” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் பால் பண்ணை வளாகத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பால் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்கள் சங்க ஆவின் நல்லுறவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டப் பேரவை தலைவர் அப்பாவு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “14 வயது வரையிலான மாணவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்று கடந்த 2002-ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த திட்டம் இப்போது சமக்ர சிக்‌ஷா அபியான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.