சட்டப்பேரவையில் நேற்று கால்நடை பராமரிப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புகள்:
* தமிழ்நாட்டில் மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்திட மீன் வியாபாரம், கடற்பாசி வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு போன்ற செயல்பாடுகளுக்கு ரூ.25 கோடி மூலதனத்தில் 50,000 மீனவ மகளிர் பயனடையும் வகையில் மகளிர் கூட்டு குழுக்களுக்கு நுண் கடன் வழங்கப்படும்.
* காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் 16 கடலோர மீனவ கிராமங்கள் ரூ.32 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகங்கள் ரூ.45 கோடி செலவில் ‘பசுமை மீன்பிடி துறைமுகங்களாக’ மேம்படுத்தப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம், அவுரிவாக்கம் கீழ்குப்பம் மற்றும் வல்லம்பேடுகுப்பம் கிராமங்களில் புதிய மீன் இறங்குதளங்கள் ரூ.9 கோடி செலவில் அமைக்கப்படும்.
* செங்கல்பட்டு சதுரங்கப்பட்டினம் மீனவ கிராமத்தில் புதிய மீன் இறங்குதளம் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
* தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் வாயிலாக திருவொற்றியூர், இரயுமன்துறை, தரங்கம்பாடியில் டீசல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
* சென்னை, மாதவரம், மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் தங்கி பயிலுவதற்கு ஏதுவாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் விடுதி உட்கட்டமைப்பு பணிகள் ஏற்படுத்தப்படும்.
* சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த கடலோர மீனவ கிராமங்களில், உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள விரிவான தொழில்நுட்ப சாத்தியகூறுகளை ஆய்வு செய்திட ஏதுவாக ரூ.5 கோடி ‘சுழல் நிதி’ உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தரங்கம்பாடி, தேங்காப்பட்டணம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகங்கள் பசுமை மீன்பிடி துறைமுகமாக ரூ.45 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.