சென்னை திருவொற்றியூர் அப்பர் நகரைச் சேர்ந்த 10 பேருக்கு கடந்தமாதம் 29-ம் தேதி திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் காலரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். அந்தப் பகுதியில் குழாயில் வந்த குடிநீரை குடித்ததில் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், அரசு அதை மறுத்தது.
இந்த சம்பவத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் இருந்த 65 வயது பெண் நேற்று உயிரிழந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேர் நேற்று அதே புகாருடன் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இதேபோல, பல்லாவரம் காமராஜர் நகர் மற்றும் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் 19 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.