சென்னை: “தருமபுரி காட்டில் வனத்துறையினாரால் இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொங்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். கொத்தனாராக பணி செய்து வந்த செந்திலையும், அவரது தந்தை கோவிந்தராஜ், சகோதரர் சக்தி ஆகியோரை கடந்த மார்ச் 17-ம் தேதி பென்னாகரம் வனக்காவல் நிலையத்திற்கு வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பின் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அவர்களின் குடும்பத்தினர் இது குறித்து தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 19-ம் தேதி புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து சக்தியை அவரது குடும்பத்தினரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.