பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடருவதால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர், பல மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார். வேலைக்குகூட செல்லாமல் மற்றவர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரேநாளில் ரூ.20 ஆயிரத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் கடன் சுமையால் அருண்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.