சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் ஆளுநரும், பாஜ முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கி செடிகளை பரிசாக வழங்கினார். தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி: சென்ற முறை தெலங்கானாவில் தேசிய கொடியை ஏற்றிவிட்டு புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக தேசியக் கொடியை ஏற்றினேன். இந்தியாவிலேயே இரண்டு மாநிலத்தில் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பினை பிரதமர் எனக்கு வழங்கினார்.
அப்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேனோ, அதே மகிழ்ச்சியோடு எனது தொண்டர்களோடு, சகோதரர்களோடு கொடியை ஏற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தின் பிரதிநிதியாக நான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளேன். தற்போது இருக்கும் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை கட்சியில் ஒரு தொண்டனாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த பதவி ஆசையால் நான் ஆளுநர் பதவியை விட்டு வரவில்லை. மாநிலத் தலைவராக வேண்டும் என்று நான் வேலை செய்கிறேன் என கூறுவதில் துளி அளவும் உண்மை இல்லை” என்றார்.
The post தலைவர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா? தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.