சண்டிகர்: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச அதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் – ஹரியானா எல்லையில் போராடி வரும் விவசாயிகளை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால், சர்வாண் சிங் பாந்தே உள்ளிட்டோரை பஞ்சாப் போலீஸார் நேற்றிரவு (புதன்கிழமை) கைது செய்தனர். மேலும், எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை அப்புறப்படுத்தி அவர்களின் தற்காலிக கூடாரங்களையும் அகற்றினர். போராட்டக் களத்திலிருந்து வீடு திரும்ப விரும்பிய விவசாயிகளை பேருந்துகள் மூலம் அனுப்பிவைத்தனர். எதிர்ப்பில் ஈடுபட்டோரை கைது செய்தனர். இதனால் பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள கன்னவுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.