அரியலூர்: “சட்டத்தைப் பற்றி தெரியாத, மக்கள் பிரச்சினை பற்றி தெரியாத, ஒரு நடிகர் வக்பு சட்டத் திருத்த மசோதாவில் நாடகம் ஆடுகிறார். சினிமாவில் நடிப்பதையும், காசு சம்பாதிப்பதையும் ஒரு தொழிலாக கொண்ட நடிகர் விஜய், மிகப் பெரிய இந்து விரோத தீய சக்தி என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று (ஏப்.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணியை தமிழக மக்கள் முற்றிலுமாக வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் புறக்கணிப்பார்கள். திமுக கூட்டணி இந்துக்களுக்கு விரோதமான தீய சக்தி என்பதை தமிழக மக்கள் நிரூபிப்பார்கள்.