தவெக மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் இழுபறி நீடித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, தவெக தலைவர் விஜய்யிடம் மனு அளிக்க வந்த பெண்ணுடன் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தவெகவில் அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்ள் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவரை 95 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இறுதிகட்டமாக 25 மாவட்டச் செயலாளர்களை விஜய் நேற்று அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அந்த வகையில், நிர்வாகிகளை நேர்காணல் செய்து பொறுப்புகளை அறிவிப்பதற்காக கட்சித் தலைவர் விஜய் பனையூரில் உள்ள தலைமையகத்துக்கு நேற்று வருகை தந்தார். தொடர்ந்து, 25 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை அறிவிக்க வேண்டிய நிலையில் கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை மட்டுமே விஜய் இறுதி செய்தார். அதில், சென்னை தெற்கு மேற்கு மாவட்டச் செயலாளராக விஜய்யின் உதவியாளர் மகன் சபரிநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாகவும், சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.