புதுடெல்லி: அணு ஆயுத மிரட்டல் இனி செல்லாது. ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களில் இந்தியாவின் வலிமையை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது. இந்த நேரத்தில் முப்படைகளுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன். நமது உளவு அமைப்புகள், விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது லட்சியம் நிறைவேறி உள்ளது. நமது வீரர்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளனர். இந்த வெற்றியை நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.