தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மதிவேந்தன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவை வருமாறு:
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில், தேசிய நிதி மேம்பாட்டுக் கழகங்களிலிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று, சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், அரசு மானியத்துடன், மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் ரூ.25 கோடி செலவில் உறுதுணை – குறு மற்றும் நுண் கடன் திட்டம் செயல்படுத்தப்படும்.
* உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் செய்வது உறுதி செய்யும் வகையில் தாட்கோ வணிக வளாகத் திட்டம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகளின் படி வணிக வளாகங்கள் தொழில் தொடங்க வணிகர்களுக்கு தாட்கோ உதவி செய்யும்.
* பழங்குடியினர் உழவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஐந்திணை பசுமை பண்ணை திட்டம் ரூ.14 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
* திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் அமைந்துள்ள தாட்கோ தொழிற்பேட்டைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்கள் நவீன தொழில்களை உடனடியாக தொடங்க ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய ஆயத்த தொழில் கூடங்கள் ரூ.115 கோடி செலவில் அமைக்கப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த இளம் கலைஞர்களின் கலை, இலக்கியம் மற்றும் நுண்கலை திறன்களை மெருகூட்டவும், நமது பாரம்பரிய கலை வடிவங்களின் சிறப்பை நிலை நிறுத்தவும் மூன்று நாள் பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கு நடத்தப்படும். இந்த முயற்சியின் வாயிலாக ஆதி திராவிட மற்றும் பழங்குடியினரின் தனித்துவமான பாரம்பரிய கலை இலக்கிய மற்றும் கலாச்சார செல்வங்கள் பாதுகாக்கப்பட்டு, வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்படும்.
* தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் பணியின் போது எதிர்கொள்ளும் சுகாதார இடர்களை குறைக்கும் வகையில், விரிவான தூய்மை பணியாளர் நல்வாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் பணியாளர்களுக்கு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படும் பட்சத்தில் உயர் சிகிச்சைக்கான பரிந்துரைகளும் நோய்களை குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
* பழங்குடியின மக்களுக்கு தேவையான உயர்தர மருத்துவ சேவைகள் அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே கிடைப்பதை உறுதி செய்வதற்காக தொல்குடி நல்வாழ்வு திட்டம் ரூ.10 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
* இதழியல் மற்றும் தொடர்யில் துறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு திறன்களை மெருகூட்டும் வகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிலையத்தில் 50 பட்டதாரிகளுக்கு ஒரு வார காலம் உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியின் நிறைவில் முன்னணி ஊடக நிறுவனங்களில் இரண்டு மாதங்களுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய நேரடி பயிற்சி வழங்கப்படும். இதற்கென ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் கல்வி அறிவையும் தொழில்நுட்ப திறன்களையும் மேம்படுத்தும் வகையில் ரூ.3.55 கோடி செலவில் அதிநவீன உட்கட்டமைப்பு உருவாக்கப்படும். இதன் முதற்கட்டமாக அனைத்து விடுதிகளிலும் இணைய வசதியுடன் கூடிய தொலைக்காட்சிகள் நிறுவப்படும். இதன் வாயிலாக மாணவர்கள் கல்வி சார்ந்த காணொலிகளை சிரமம் என்று பார்க்கவும் இணையவழி கற்றல் மூலங்களை எளிதாக அணுகவும் முடியும்.
The post தாட்கோ தொழிற்பேட்டைகளில் நவீன தொழில் தொடங்க ரூ.115 கோடியில் அடிப்படை வசதிகளுடன் ஆயத்த தொழில் கூடங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு appeared first on Dinakaran.