தாது மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் விவகாரம் தொடர்பாக, நெல்லை, சென்னையில் குவாரி உரிமையாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வி.வி. மினரல்ஸ் நிறுனத்துக்கு சொந்தமாக தாதுமணல் ஆலைகளில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தாது மணல் குவாரிகளில் சோதனை நடத்தினர். அதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு, ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தாது மணல் ஆலை உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அபராதம் விதித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.