பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசியதாவது: நடந்தாய் வாழி காவிரி திட்டம் என்னவாயிற்று என்று கேட்கின்றனர். அந்த திட்டத்திற்கு நாங்கள் என்ன எதிராக உள்ளோமா? நாங்களும் விரும்புகிறோம், ஆனால் பணம்?… காவிரி, திருமணிமுத்தாறு, சரபங்கா, பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய ஆறுகளை மாசின்றி பாதுகாப்பது, புத்துயிர் பெற செய்தல், நீராதாரங்களை மேம்படுத்துவது இதன் நோக்கம்.
முதற்கட்டமாக காவிரி ஆறு மேட்டூரிலிருந்து திருச்சி வரையில் மற்றும் அதன் 5 கிளைகள், 2வது கட்டம் திருச்சி முதல் கடல் முகத்துவாரம் வரை. 3வது கட்டம், இந்த கட்டத்திற்கு மொத்தம் ரூ.934 கோடி தேவை. ஒன்றிய அரசின் பங்கு 60 சதவிகிதம் ரூ.560 கோடி. மாநில அரசின் பங்கு ரூ.373 கோடி. இதற்கான நிதி ஒன்றிய அரசிடம் இருந்து வரும்போது அதை செய்ய கடமைப்பட்டுள்ளோம். சரபங்கா திட்டத்திற்கு நீங்கள் உங்கள் ஆட்சியில் பெரிய முயற்சி எடுத்து என்ன செய்தீர்கள்?
ஒரேயொரு ஊர் அது ஆட்டையாம்பட்டியோ, காட்டையாம்பட்டியோ என்ற ஒரு ஊர். அந்த ஊர்க் குளத்திற்கு மட்டும்தான் கொடுத்தீர்கள். ஆனால், நாங்கள் வந்ததற்கு பிறகு எல்லா குளத்திற்கும் கொடுத்திருக்கிறோம். அந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அதேமாதிரி அத்திக்கடவு-அவிநாசி நாங்கள் அதையும் நிறைவேற்றியிருக்கிறோம்.
ஆனால் நீங்கள் அப்படி இல்லை. நாங்கள் கொண்டுவந்த திட்டம் என்று நினைத்து தாமிரபரணி-கருமேனியாறு திட்டத்தை 2009-ல் கலைஞர் அடிக்கல் நாட்டினார் என்பதற்காக அப்படியே கிடப்பிலே போட்டீர்கள். 10 ஆண்கள் வீணாகிவிட்டது. கடைசியில் நாங்கள் வந்துதான், இருப்பதை தட்டி எடுத்து இன்றைக்குத்தான் அதை நிவர்த்தி செய்திருக்கிறோம். நீங்கள் மாற்றாந்தாய் மனமா, நாங்கள் மாற்றாந்தாய் மனமா?
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: நான் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த காரணத்தினால் சொல்கிறேன். நில எடுப்பு செய்யாமல் விட்டுவிட்டு சென்றுவிட்டீர்கள். 2வது நில எடுப்பு எடுக்கும்போது அந்த நிலத்தினுடைய வழிகாட்டு மதிப்பை ஒன்றிய அரசு மாற்றி அமைத்தது. அதனால் தான் அந்தப் பிரச்னை. அந்த நில எடுப்புப் பிரச்னையினால் தான் காலதாமதமேயொழிய மற்றவையெல்லாம் கிடையாது.
அமைச்சர் துரைமுருகன்: எதிர்க்கட்சித் தலைவர் எப்போதும் சிலநேரங்களில் உண்மையை டமால் டமால் என்று போட்டு உடைத்து விடுவார். இப்போது என்ன சொல்கிறார், நான் நிறுத்தவில்லை என்கிறார். அப்படியானால் உங்களுக்கு முன்பிருந்த அம்மா நிறுத்திவிட்டார்களா?
எடப்பாடி பழனிசாமி: திசை திருப்ப வேண்டாம். நடந்த உண்மையை சொல்கிறேன். ஒன்றிய அரசாங்கம் அந்த நிலத்தினுடைய மதிப்பை அதிகரித்து விட்டார்கள். அதாவது ஒரு மடங்குக்கு ஒரு மடங்கு கொடுத்தார்கள். அப்போது அந்த நிலம் எடுக்கும்போது பிரச்னையாகிவிட்டது. முதலில் எடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு மடங்குக்கு ஒரு மடங்குதான். இரண்டாவது எடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு மடங்கு என்பது 3 மடங்காக ஆனது. அதில் பிரச்னை ஆனவுடன்தான் நில எடுப்பிலே காலதாமதம் ஆனது. இதுதான் உண்மை.
அமைச்சர் துரைமுருகன்: எப்படி அது நீண்ட நாள் காய்ந்து கிடந்தது. அதை நீங்களாக நிறுத்தினீர்களா அல்லது அதுவாக நின்றுவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால், நாங்கள் வந்துதான் அதை மறுபடியும் எடுத்திருக்கிறோம். ஒரு ஆட்சி வந்தால் அவர்கள் சில திட்டங்களைப் போடுவார்கள். எந்த ஆட்சியாக இருந்தாலும் அவர்கள் மக்களுக்காக போடுவார்கள். ஜனநாயகத்தில் அடுத்து ஒரு கட்சி வரலாம். மறுபடியும் அந்தத் திட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்.
அப்போதுதான் அது மக்களுக்கு சென்று சேருமே தவிர, இல்லாவிட்டால் போட்டி அரசாங்கம் தான் நடத்திக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் என்ன ஆயிற்று என்றார். அது நல்ல திட்டம். அத்திட்டம் கலைஞர் கண்டுபிடித்த திட்டம். அவர் மாயனூரில் ஏற்கனவே ரூ.156 கோடி நிதி ஒதுக்கி அந்த தடுப்பணையைக் கட்டினார். தற்போது 5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருக்கிறது.
அங்கிருந்து கால்வாயை வெட்டி, புதுக்கோட்டைக்கு கொண்டு சென்று, வெள்ளாற்றோடு கலந்து, அது அப்படியே செல்ல வேண்டும். அப்போது நாங்கள் ஆட்சியிலிருந்து சென்றுவிட்டோம். 10 ஆண்டுகாலம் நீங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், ஒன்றும் செய்யவில்லை. கரூர் ஜில்லாவிற்குட்பட்ட பகுதியில் ஒரு இடம் வருகிறது, அதற்கு ஒரு டெண்டர், அதைவிட்டு, 56 கி.மீ. தூரத்திற்கு அப்பால் உள்ள இடத்திற்கு ஒரு டெண்டர் என டெண்டர்ஸ் விடப்பட்டுள்ளன. யாராவது இப்படி செய்வார்களா?.
எடப்பாடி பழனிசாமி: எந்தவொரு திட்டத்திற்கும் முழுமையாக நிலம் எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால், அதற்கு 25 ஆண்டு காலம் தேவைப்படும். எனவே, ஆங்காங்கே நிலம் கிடைக்கின்றபோது, வேகமாக, துரிதமாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும. அதன் அடிப்படையில் தான் எந்தெந்த இடங்களில் நிலங்கள் எடுக்கப்பட்டனவோ, அந்தந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டன. இந்த மாவட்டத்திற்கு ஒன்று, அந்த மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் டெண்டர் விடப்படவில்லை.
அமைச்சர் துரைமுருகன்: எது எப்படியோ திட்டம் சென்றுவிட்டது. இப்போது அதற்கு நிறைய நிதித் தேவை. எங்களுடைய நிதிநிலையில் இந்த ஆண்டு அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. அடுத்த ஆண்டுக்குள் ஒன்றிய அரசினுடைய நிதியிலோ அல்லது வெளிநாட்டு கடனையோ பெற்று, நிச்சயமாக அந்த திட்டத்தை முடிப்பார் முதல்வர் என்று உறுதியளிக்கிறேன். காரணம், இந்த திட்டம் கலைஞரால் ஆரம்பிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை அவருடைய மகன் முடித்து காட்டுவார்.
The post தாமிரபரணி – கருமேனியாறு திட்டத்தை நிறுத்தியது யார்? துரைமுருகன் கேள்வியால் திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் appeared first on Dinakaran.