சென்னை: தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு, அதில் கைவைப்பது ஆபத்து என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய மடல்: மொழிவழி மாநிலங்களாக உருவாக்கப்பட்ட இந்திய ஒன்றியத்தில், ஒரு மாநிலத்தில் பேசப்படும் மொழி மீது மற்றொரு மொழியைக் கட்டாயமாகத் திணிக்கும்போது அந்த மாநில மக்கள் பேசுகின்ற மொழியும் அதன் பண்பாடும் சிதைக்கப்படும். இந்தியும் சமஸ்கிருதமும் வலிந்து திணிக்கப்படுவதால் இந்திய மொழிகள் பலவும் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1961ம் ஆண்டு எடுக்கப்பட்டபோது இந்தியாவிலிருந்த தாய்மொழிகளின் எண்ணிக்கை 1652 எனப் பட்டியலிடப்பட்டது. மாநில மொழிகள் மட்டுமின்றி, பழங்குடிகள்-இனக்குழுக்கள் உள்ளிட்டோர் பேசுகின்ற மொழிகளும் இந்தக் கணக்கில் வரும். 10 ஆண்டுகள் கழித்து 1971ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 109 மொழிகள் மட்டுமே தாய்மொழிகள் பட்டியலில் இடம்பெற்றன. எப்படி இந்த திடீர் மாற்றம்?
இந்திய அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளும், இவை தவிர, 10 ஆயிரம் பேருக்கு மேல் பேசக்கூடிய மொழிகளும் மட்டுமே தாய்மொழி எனக் கணக்கிடப்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டதால், தாய்மொழிகளின் பட்டியலில் இருந்த 1500க்கும் மேற்பட்ட மொழிகள் தங்கள் தகுதியை இழந்தன என்று மொழியியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தாய்மொழியாகவே அங்கீகரிக்கப்படாத மொழிகளைச் சேர்ந்தவர்கள் எப்படி இந்தியாவில் தங்கள் வாழ்வுரிமைக்கானத் தேவைகளை எதிர்கொள்வார்கள்?
உலகின் மிகப் பெரும் வல்லராசாக இருந்த சோவியத் யூனியன் என்ற மாபெரும் ஒன்றியம் பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. எனினும், அதில் பெரும்பான்மை மொழியான ரஷ்ய மொழி ஆதிக்கம் செலுத்தியது. சோவியத் யூனியன் சிதைவடைந்து 15க்கும் மேற்பட்ட நாடுகளாகப் பிரிந்தததில் அரசியல்-பொருளாதாரப் பின்னணிகளுடன் மொழி ஆதிக்கமும் ஒரு காரணமாக அமைந்தது.
தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித்திணிப்பினால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு நம் பக்கத்திலேயே இருக்கிறது. கிழக்கு வங்காளத்தினர் தங்கள் தாய்மொழியான வங்காளத்தையும் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். போராட்டங்களை நடத்தினர்.
பாகிஸ்தானில் அதிகாரத்தில் இருந்தவர்கள் கிழக்கு வங்காள மக்களின் குரலை மதிக்கவில்லை. தங்கள் தாய்மொழியைத் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, டாக்கா நகரில் தடையை மீறி நடத்திய பேரணியின் மீது பாகிஸ்தான் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். நாம் தாய்நாட்டை மதிக்கிறோம். தாய்மொழியை உயிரெனக் காக்கின்றோம். வங்கதேசத்தில் தாய்மொழியையும் அதன் பண்பாட்டுக் கூறுகளையும் காத்திடுவதற்காகப் போராடி உயிரிழந்த மாணவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், பிப்ரவரி 21ஆம் நாளை தாய்மொழி நாளாக அறிவிக்கவேண்டும் என வங்கதேசத்தின் பிரதிநிதிகள் ஐ.நா.மன்றத்தில் முன்மொழிந்தனர்.
அதற்கான ஆதரவையும் பெற்றனர். ஐ.நா.அவையின் யுனெஸ்கோ அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 1999ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் நாள் உலகத் தாய்மொழி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு மொழி அழிந்தால், அந்த இனம் அழிக்கப்படும். உலகத் தாய்மொழி நாள் என்பது பிப்ரவரி 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டாலும் ஒவ்வொரு நாளுமே நமக்குத் தாய்மொழி நாள்தான். ஆதிக்க மொழிகளிடமிருந்து அன்னைத் தமிழைக் காப்பதற்கு எல்லா நாளிலும் விழிப்புடன் இருப்போம்.
நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகேதார-சகோதரிகள்தான். இந்தித் திணிப்பால் தமது தாய்மொழிகளை இழந்த வடமாநிலங்களின் சகோதர-சகோதரிகளின் நிலை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே நம் மொழிக் கொள்கை. அதனால்தான் மொழித் திணிப்பை திராவிட இயக்கம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு தன் உயிரினும் மேலானத் தமிழையும் அதன் பண்பாட்டையும் உயிரைக் கொடுத்து காப்பாற்றி வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
The post தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு அதில் கைவைப்பது ஆபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் appeared first on Dinakaran.