பாங்காக்: தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் கிழக்கே உள்ள பிராச்சின் பூரி மாகாணத்தில், 49 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகிச் சென்று வடிகாலுக்குள் விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 31 பேர் படுகாயமடைந்தனர். பேருந்து பள்ளமான சாலையில் சென்று கொண்டிருந்தபோது பிரேக்குகள் செயலிழந்ததன் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. அதன் பின்னர் பேருந்து தடம் புரண்டது என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துப் பகுதியில் மருத்துவ உதவியாளர்களும் மீட்புப் பணிக் குழுவினர்களும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து தாய்லாந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. உயிரிழப்புகள் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “விபத்துக்களைத் குறைக்கவும், மீண்டும் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்கவும், வாகனங்களை ஆய்வு செய்வது பாதுகாப்பாக இருக்க வேண்டும், குறிப்பிட்ட தரநிலைகளை நிறைவேற்ற வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.