*பயிர்களை சாலையில் போடுவதை தடுக்க கோரிக்கை
சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த சீசனில் தாளவாடி மலைப்பகுதியில் மானாவாரி பயிராக கொள்ளு பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
அறுவடை செய்யப்பட்ட கொள்ளு பயிரை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் தார் சாலைகளில் போட்டு, அதன் மீது வாகனங்கள் செல்லும்போது தானியத்தை பயிரிலிருந்து பிரித்தெடுக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மல்லன்குழி, மெட்டல்வாடி, அருள்வாடி பகுதிகளில் உள்ள தார் சாலைகள் முழுவதும் கொள்ளு பயிர்கள் போட்டு களமாக பயன்படுத்துவதால் அந்த சாலைகளில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் சாலையில் போடப்பட்ட கொள்ளு பயிர் மீது இயக்கப்பட்ட கார் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.
இதற்கிடையே நேற்று மெட்டல்வாடி அருகே மலை கிராமங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் மல்லன்குழி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்றபோது சக்கரத்தில் கொள்ளு பயிர் சக்கரத்தில் சிக்கியதால் பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதனால் கிராமங்களுக்கு செல்வதற்காக பஸ்ஸில் பயணித்த பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
பயிர்களை தார் சாலையில் போட்டு உலர்த்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், தார் சாலையில் கொள்ளு பயிர்களை போட்டு உலர்த்தும் விவசாயிகளிடம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி சாலையில் கொள்ளு பயிர்களை போடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தார் சாலையில் உலர்த்திய கொள்ளு பயிர் சக்கரத்தில் சிக்கி அரசு பஸ் பழுது appeared first on Dinakaran.