நெல்லை: நெல்லை மாவட்டம், திசையன்விளை மற்றும் தூத்துக்குடியில் விவி மினரல்ஸ் தாது மணல் ஆலைகள் இயங்கி வருகின்றன. தாது மணல் முறைகேடாக எடுக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையிலான அதிகாரிகள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தாது மணல் குவாரிகளில் சோதனை நடத்தினர். பெருமளவு முறைகேடு நடப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஆலைகள் மூடி சீல் வைக்கப்பட்டது. முறைகேடு தொடர்பாக சுமார் ரூ.6 ஆயிரம் கோடி தாது மணல் ஆலை உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தாது மணல் ஆலை உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் இது தொடர்பான விரிவான விசாரணையை நீதிமன்றம் நடத்தி வருகிறது.
ரூ.6000 கோடி அபராதம் விதிக்கும் அளவிற்கு விதிமீறல் நடந்திருந்தால், இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதில் தொடர்புடைய நபர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டிருந்து. இந்நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கீரைக்காரன்தட்டில் உள்ள விவி மினரல்ஸ் ஆலையில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 9.30 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post திசையன்விளை தாது மணல் ஆலையில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை appeared first on Dinakaran.