திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுமலையில் வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்து கேரள முதியவர் பலியான விவகாரம் தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு படை விசாரணையை துவக்கியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 17வது கொண்டை ஊசி வளைவு அருகே வனத்துறையினரின் கண்காணிப்பு கோபுரம் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. திண்டுக்கல் தாலுகா ேபாலீசார், சிறுமலை வனத்துறையினர் நேரில் சென்றபோது, இறந்த நபரின் அருகில் பேட்டரி வயர் மற்றும் வெடிபொருட்கள் இருப்பதை கண்டனர். அப்போது மர்மபொருள் வெடித்ததில் போலீஸ்காரர்கள் மணிகண்டன், கார்த்திக் மற்றும் வனப்பாதுகாவலர் ஆரோக்கிய செல்வம் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து போலீசார், உயரதிகாரிகளுக்கு தகவலளித்ததன்பேரில் சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் போலீசார் பேட்டரி மற்றும் 8 ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றினர். தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி பிரதீப் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) மற்றும் க்யூ பிரான்ச் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இறந்த நபர் கேரள மாநிலம் கோட்டையம் பொன்குன்னம், கூரளியை சேர்ந்த சாபு ஜான் (59) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு மனைவி, 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாபு ஜான் சிறுமலை பகுதியில் மிளகு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். அதன்பின் கேரளா சென்ற இவர் மீண்டும் இங்கு வந்து மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். அந்த தோப்பு கேணியில் தண்ணீர் இல்லை. இதனால் பாறையை உடைத்து தண்ணீர் எடுப்பதற்காக திண்டுக்கல்லில் பேட்டரி மற்றும் வெடிபொருட்களை வாங்கி வந்து சம்பவ இடத்தில் அதனை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அது வெடித்ததில் சாபு ஜான் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மீட்பு பணிக்கு சென்றபோது மர்ம பொருள் வெடித்து காயமடைந்த 3 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். நேற்று திண்டுக்கல் ஜிஹெச்சில் பிரேத பரிசோதனை முடிந்து உடலை அவரது குடும்பத்தினர் பெற்று சென்று விட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு கூறினர்.
இதற்கிடையே நேற்று பயங்கரவாத எதிர்ப்பு படை இதுதொடர்பாக சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி விட்டு சென்றனர்.
The post திண்டுக்கல் அருகே வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்து கேரள முதியவர் பலி: பயங்கரவாத எதிர்ப்பு படை விசாரணை appeared first on Dinakaran.