மதுரை : திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் நெய் தயாரிப்பதற்கான தடை தொடருகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜூன் மாதம் முதல் எங்கள் நிறுவனம் நெய் விநியோகம் செய்து வந்தது. அந்த நெய்யில் (மாட்டுக் கொழுப்பு) கலப்படம் இருப்பதாக குஜராத்தை சேர்ந்த நிறுவனம் அறிக்கை அளித்தது. இதையடுத்து எங்கள் நிறுவனத்திடம் நெய் கொள்முதல் செய்ய தடை விதித்து, எங்கள் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தானம் கருப்புப் பட்டியலில் சேர்த்தது.
இதையடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை எங்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ் முறையாக ஆய்வு நடத்தாமல் தனியார் ஆய்வகம் அளித்த அறிக்கை அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் நெய் தயாரிக்க வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த உணவு பாதுகாப்பு அலுவலரின் உத்தரவு தொடர்கிறது.அதே நேரத்தில் பால் பதப்படுத்துதல், விற்பனை செய்வதை தொடரலாம்.இது குறித்து ஒன்றிய அரசின் உணவு பாதுகாப்பு தர நிலைய அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
The post திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் நெய் தயாரிப்பதற்கான தடை நீடிக்கிறது : ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.